மலையக சமூகத்தின் விடுதலைக்கு கல்வியே ஒரே ஆயுதம் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தின் 90ஆவது ஆண்டு விழா நேற்று (20.10.2026) இரத்தினபுரி மாநகர சபை மண்டத்தில் பாடசாலை அதிபர் இருளப்பன் இரவிதலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக பெருந்தோட்ட,சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கலந்துகொண்டார்.

சபரகமுவை மாகாண ஆளுநர் திருமதி சம்பா ஜானகி ராஜரட்ண, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், திட்டப் பணிப்பாளர் குமாரகே, மாகாண உதவி கல்விப்பணிப்பாளர் வீ. சண்முகநாதன் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இன்னும் பல வருடங்களுக்கு எங்களது மலையக சமுதாயம் ஏழை சமுதாயமாக இருக்கக்கூடாது என்றால், நாங்கள் ஏனைய துறைகளை விட இந்த கல்வித்துறையிலே சாதனைகளை படைக்க வேண்டும். மாணவர்களின் கல்விக்காக மிகவும் சிரமத்திற்கு மத்தியிலே கல்வி புகட்டுகின்ற ஆசிரியர்களுக்கும், தலைமைத்துவம் கொடுக்கும் அதிபர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.”

“என்னால் எனது மக்களுக்கு எவ்வளவு செய்ய முடியுமோ, எனது மக்களுடைய குறைகளை, துன்பங்களைத் தீர்ப்பதற்கு என்னால் எந்தளவு பங்களிப்பு செய்ய முடியுமோ, அதை என்னுடைய சக்திக்கு மிஞ்சியதாகவே நான் செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய எல்லா செயல்பாடுகளுக்கும் ஜனாதிபதி, அமைச்சர்கள், மாகாண ஆளுநர் உறுதுணையாக இருக்கிறார்கள்.”
“அன்பார்ந்த மாணவர்களே, கல்வி தான் எமது சமூகத்தினுடைய விடுதலைக்கான ஒரே ஆயுதம்.
எனது சமூகத்திலே வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள் பலநூறு பேர் உருவாக வேண்டும்.”

“குடும்பத்தில் ஏற்பட்ட கஷ்டங்கள் காரணமாக பல சவால்களுக்கு முகம்கொடுத்தவன் நான். ஒரு காலத்திலே அரசியல்வாதிகளை அன்னார்ந்து பார்த்திருக்கிறேன். ஏனைய சமூக மாணவர்கள் அழகாக உடுத்தி பாடசாலைக்கு செல்லும்போது, ஏன் எங்களுடைய சமூகத்தில் மாத்திரம் இவ்வாறு நிகழ்கின்றது என யோசித்திருக்கிறேன். இதற்கெல்லாம் காரணம் அரசியல் தலைமைத்துவம் இல்லாதது. அரசியல் குரல் இல்லாதபோது அந்த சமூகம் அடிமைப்பட்ட சமூகமாக இருக்கிறது. அதனால்தான் சமூக மாற்றத்திற்காக அரசியலில் ஈடுபட்டேன்.”
உரித்தோடு கூடிய வீட்டுத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இரத்தினபுரி மாவட்டத்திற்கு சுமார் 400 வீடுகள் கட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மலையக பாடசாலைகளுக்கு குறைந்தபட்சம் 2 ஏக்கர் காணிகளை வழங்குவதற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நாடாளுமன்றத்தில் மூன்று கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.
இரத்தினபுரி நகரில் தமிழ் பாடசாலை அமைப்பது தொடர்பாகவும் பிரதமரிடம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு 600 மில்லியன் ரூபாவும், 2026 ஆம் ஆண்டு 600 மில்லியன் ரூபாவும் இரத்தினபுரி மாவட்ட மலையக பாடசாலைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2027 ஆம் ஆண்டும் பாடசாலை அபிவிருத்திக்காக பல மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆலயங்கள், வீதிகள், குடிநீர் வசதி போன்ற தேவைகளுக்காகவும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
90வது ஆண்டு விழாவை கொண்டாடும் இப்பாடசாலை, மிக விரைவில் புதிய அழகிய கட்டிடத் தொகுதியில் அடுத்த ஆண்டு விழாவை கொண்டாடும் என தானும் ஆவலுடன் இருப்பதாக தெரிவித்தார்.
இரத்தினபுரி எஸ். ஆர். இரவீந்திரன்
