வெவர்லி தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு ஜீவன் தொண்டமான் தலைமையில் தீர்வு: ரூ.1,750 முழுமையான சம்பளம் வழங்க நிர்வாகம் உறுதி!
அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான வெவர்லி தோட்டத்தின் மோனிங்டன் மேல் பிரிவு, மோனிங்டன் கீழ்ப் பிரிவு, போட்மோர் உள்ளிட்ட தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், சம்பளக் கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 02ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.



இது தொடர்பாக இதொகா செயலாளர் நாயகம் – பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தலைமையில் தோட்ட நிர்வாகத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் இணக்கமான முடிவு எட்டப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு முழுமையாக சம்பளம் கிடைப்பதை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளதாக காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் ஒரு கிலோகிராம் தேயிலை கொழுந்துக்கு ரூ.90 என்ற அடிப்படையில் கொழுந்து பறிக்குமாறு நிர்வாகம் அறிவுறுத்தியதாகவும், அதற்கேற்ப கொடுப்பனவு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதாகவும் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வெவர்லி தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகில் கவனவீர்ப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தப் பிரச்சினை இ.தொ.கா பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று (05) அக்கரப்பத்தனை ஆக்ரா கிளப்பில் அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவன நிர்வாகத்துடன் முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது.
அப்போது அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் தொடர்பாக அண்மையில் முன்வைக்கப்பட்ட பல்வேறு முறைப்பாடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக, தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தை முழுமையாக வழங்காமல் வேறு முறைகளில் கொடுப்பனவு வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இதனால் EPF, ETF,சேவைக்கால கொடுப்பனவு உள்ளிட்ட தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமைகள் பாதிக்கப்படக்கூடும் எனவும் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன.
வெவர்லி தோட்டத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.1,750 தினசரி சம்பளத்திற்குப் பதிலாக ரூ.1,350 என்ற அடிப்படையில் சம்பளம் பதிவு செய்யப்பட்டதாகவும் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, கடந்த மாதமும் இம்மாதமும் வெள்ளி, சனிக்கிழமைகளில் ரூ.1,350 என்ற அடிப்படையில் சம்பளம் பதிவு செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும், அவர்களுக்கு உரிய ரூ.1,750 சம்பளத்தை கணக்கிட்டு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவன நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
மேலும், ரூ.1,350 என்ற அடிப்படையில் சம்பளம் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை மீள்பரிசீலனை செய்து, எதிர்வரும் 25ஆம் திகதிக்குள் ரூ.1,750 என்ற முழுமையான சம்பள அடிப்படையில் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
அதேபோன்று ஞாயிற்றுக்கிழமை வேலைநாட்களில் ஒன்றரை நாள் சம்பளம் வழங்குவது தொடர்பாகவும் பேசப்படது.
இதனுடன், எல்பியன் தோட்டத்தில் தற்போது மூடப்பட்டுள்ள தேயிலைத் தொழிற்சாலை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
அந்தத் தொழிற்சாலையை எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதிக்குள் அல்லது தீபாவளிக்கு முன்னதாக மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
அதேபோன்று, வெவர்லி தோட்டத்தில் மூடப்பட்டுள்ள தேயிலைத் தொழிற்சாலையை மீண்டும் இயக்குவது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
தற்போது தொழிற்சாலையை இயக்குவதற்குத் தேவையான அளவு தேயிலை கொழுந்து கிடைக்கவில்லை என நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில், இதற்கான புதிய திட்டமொன்றை உருவாக்கி, தேவையான அளவு கொழுந்தை பெற்றுக்கொண்டு தொழிற்சாலையை விரைவில் மீளத் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கு சட்டரீதியாக வழங்கப்பட வேண்டிய சம்பளம் மற்றும் ஏனைய உரிமைகள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதே இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிலைப்பாடு என ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளத்தை குறைத்து வழங்குவது, EPF, ETF, சேவைக்கால கொடுப்பனவு உள்ளிட்ட சட்டபூர்வமான உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவது அல்லது வேறு முறைகளின் ஊடாக தொழிலாளர்களை பாதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அவர் வலியுறுத்தினார்.
எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு தோட்ட நிர்வாகத்திடம் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தினார்.
மேலும், தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படாமல் இருப்பது அல்லது சட்டத்திற்கு முரணான முறையில் சம்பளம் வழங்கப்படுவது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டால், தொழிற்சங்கத்தின் ஊடாக உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.
கலந்துரையாடலில் இ.தொ.கா பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல், அக்கரப்பத்தனை பிரதேச சபைத் தலைவர் ரதிதேவி, முன்னாள் அக்கரப்பத்தனை பிரதேச சபைத் தலைவர் கதிர்ச்செல்வன், வெவர்லி தோட்ட முகாமையாளர் குமார் தேவதாசன், அக்கரப்பத்தனை பெருந்தோட்ட நிறுவனத்தின் அக்கரப்பத்தனை பிரிவுக்குப் பொறுப்பான பணிப்பாளர் ரஜித பெரேரா உள்ளிட்ட நிர்வாக அதிகாரிகள், தோட்டத் தலைவர்கள்,தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
- ஊடகப் பிரிவு – இதொகா
