நுவரெலியா மாவட்டம், கொத்மலை பிரதேசத்திற்குட்பட்ட கெம்நீதன் தோட்ட மக்கள் தங்களின் பிரதான பாதைகளை உடனடியாகப் புனரமைத்துத் தருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெதமுல்லை முதல் கெம்நீதன் வரையான சுமார் 8 கிலோமீற்றர் நீளமான பாதை, கடந்த 2021ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில், நுவரெலியா பிரதான சாலையுடன் இணைக்கும் நோக்கில் விஸ்தரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்தப் பாதையில் சுமார் 3 கிலோமீற்றர் பகுதி மாத்திரமே புனரமைக்கப்பட்டுள்ளது.மீதமுள்ள சுமார் 5 கிலோமீற்றர் பகுதி புனரமைக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

வெதமுல்லை, லில்லிஷ்லேண்ட்,கெம்நீதன் ஆகிய மூன்று பகுதிகளைச் சேர்ந்த மக்களின் பிரதான போக்குவரத்து பாதையாக இது காணப்படுகிறது.
பல்வேறு சந்தர்ப்பங்களில் அதிகாரிகளிடம் இப்பிரச்சினை தொடர்பில் அறிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும், அண்மைய மழை,வெள்ள நிலைமைகளின்போது மற்றுமொரு பிரதான பாதையில் அமைந்திருந்த பாலமும் சேதமடைந்துள்ளதால், கெம்நீதன் பகுதி மக்கள் வெளியிடங்களுக்குச் செல்வதிலும் அத்தியாவசிய தேவைகளுக்காகப் பயணிப்பதிலும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இப்பகுதியில் சுமார் 130 குடும்பங்களுக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.574 வாக்காளர்களும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த இரு பாதைகளையே தங்களது அன்றாடப் பயணங்களுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக மழைக்காலங்களில் இரு பாதைகளும் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதால், மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இத்தகைய பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும், கெம்நீதன் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் நால்வர் இவ்வருடம் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“நாங்களும் இந்த நாட்டின் குடிமக்களே. எங்களது அடிப்படை போக்குவரத்து தேவையைக் கருத்தில் கொண்டு, சேதமடைந்துள்ள இரு பாதைகளையும் விரைவாகப் புனரமைத்துத் தருவதற்கு அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கெம்நீதன் தோட்ட மக்கள் மிகவும் பணிவுடன் கோரிக்கை விடுக்கின்றனர்.
செய்தியாளர்: கௌசல்யா
