மலையக மாணவர்கள் தமது அறியாமையிலிருந்து விடுபட்டுக் கல்வித்துறையில் பாரியளவு முன்னேறி வருகின்றனர். அவர்களின் வளர்ச்சியை மேலும் அதிகரித்து சமூகத்தில் சிறந்த பிரஜையாக உருவாக்குவதே அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் பிரதான நோக்கமாகும் என்று அந்த அமைப்பின் பெருந்தோட்ட கல்வி அமைப்பின் இணைப்பாளர் எம். பி. சந்திரசேகரன் தெரிவித்தார்.
நிவித்திகலை கல்வி வலயத்தின் தமிழ்மொழி மூல பாடசாலை அதிபர்களின் ஏற்பாட்டில் நிவித்திகலை கல்வி வலயத்தின் ஒத்துழைப்புடன் இம்முறை நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களைப் பாரட்டும் விழா அண்மையில் கரவிட்டை பிறைட்டன் தமிழ் வித்தியாலத்தில் நடைபெற்றது.
அதிபர் டக்ளஸ் குமாரின் வரவேற்புரையுடன் ஆரம்பமான அந்நிகழ்வில் சபரகமுவை மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திருமதி ஜீ.டி.லக்மாலி யூ,குமாரி, சபரகமுவை மாகாண ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர், சபரகமுவை மாகாண பதில் கல்வி பணிப்பாளர் திருமதி எஸ்.ஏ.ஹுஸ்னா, பிரதிக்கல்விப்பணிப்பாளர் கோரலகே, நிவித்திகலை வலய கல்விப்ணிப்பாளர் டி.டி.ஆர். ரூபசிங்க , ஓய்வுநிலை அதிபர் ஆர், நடராஜா, ஆசிரிய ஆலோசகர் கர்ணன் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.



அதில் விசேட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய திரு. சந்திரசேகரன்:
மலையகத்தின் பல பகுதிகளிலும் எமது சேவை நீண்ட காலமாக தொடர்ந்து இடம் பெற்று வருகின்ற போதிலும் இரத்தினபுரி மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டு தொடக்கம் எமது கல்வி சேவை தொடர்கின்றது.
இதன் பயனாக இம்முறை நடைபெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 29 பாடசாலைகளிலிருந்து 334 மாணவர்கள் தோற்றியதில் 17 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர்.
சுமார் 220 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். இது வரலாற்று சாதனையாகும்.
கல்வித்துறையில் மிகவும் பின்தங்கிய சூழ்நிலையில் காணப்பட்ட நிவித்திகலை வலய தமிழ் மொழிமூல பாடசாலைகள் தற்போது தலைநிமிர்ந்து வருகின்றன.

இதற்கு மாகாணம், வலயம் , கோட்டம் ஆகிய கல்வித் திணைக்களங்களின் ஒத்துழைப்பும் இப்பகுதி தமிழமொழி மூல பாடசாலை அதிபர்கள், அசிரியர்களின் ஒத்துழைப்பும் பெற்றோர்களின் ஆர்வமும் பிரதானமாகும். எனினும், இந்த மாணவர்களுக்கான எமது சேவை தொடரும்.
இங்கு உரையாற்றிய சபரகமுவை மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திருமதி ஜீ.டி.லக்மாலி யூ, குமாரி:
நிவித்திகலை கல்வி வலயத்தில் பெரும்பாலான தமிழ் மொழிமூல பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. அதனை நிறைவேற்ற முயற்சி செய்கின்றோம்.
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவிப்பதுடன் அதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றி.தொடர்ந்து முன்னேற நம்பிக்கையுடன் அனைவரும் செயற்பட வேண்டும் என்றார்.
சபரகமுவை மாகாண பதில் கல்வி பணிப்பாளர் திருமதி எஸ்.ஏ. ஹுஸ்னா பேசுகையில்:
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற நீங்கள் பாக்கியசாலிகள். உங்களை மனதாரப் பாராட்டுகிறேன். எனினும், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெறாத பலரும் இன்று உயர் பதவிகளில் இருக்கின்றனர்.
அதனையும் நாம் மறந்து விடலாகாது. எதற்கும் நமது முயற்சி முக்கியமாகும். கலாநிதி அப்துல் கலாம் சொன்னது போல கனவு காணுங்கள். வெற்றி பெறுவீர்கள். நானும் கனவு கண்டுதான் இன்று இந்தப் பதவிக்கு வந்துள்ளேன்.
கனவுடன் கூடிய முயற்சியும் தன்னம்பிக்கையும் மிகவும் முக்கியம். அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நல்வாழ்த்துகள் என்றார்.
பிரதிக்கல்விப்பணிப்பாளர் கோரலகே உரையாற்றும் போது:
இம்முறை நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கமைய சபரகமுவை மாகாணம், மாகாண மட்டத்தில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளது. இது தனிப்பட்ட ஒருவரினால் கிடைக்கபபெற்றதல்ல.
தமிழ்,சிங்கள மொழிமூலப் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்களினது பூரண பங்களிப்பும் அவர்களின் தியாகமுமாகும். இதற்காக அனைவரையும் பாராட்டு வதில் பெருமை கொள்கிறேன்,என்றார்.
ஆசிரிய ஆலோசகர் கர்ணன் பேசுகையில்:
முயற்சி, அர்ப்பணிப்பு , தியாகம், ஒத்துழைப்பு எதுவுமில்லாமல் நாம் எதனையும் சாதிக்க முடியாது. இவை அனைத்தும் இந்த வலய தமிழ் மொழி மூல அதிபர்கள், அசிரியர்களிடம் உள்ளது. அதனால் தான் இந்த இமாலய சாதனை செய்ய முடிந்தது, என்றார்.
எஸ். ஆர். இரவீந்திரன், இரத்தினபுரி
