பெருந்தோட்டப் பாடசாலை மாணவர்களின் நவீன தொழில்நுட்ப அறிவு, விஞ்ஞானச் சிந்தனை,புத்தாக்கத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், ரோபோட்டிக்ஸ் கழகங்களை அமைப்பதற்கான ஆசிரியர் பயிற்சித் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அனைத்துலக மருத்துவ நல அமைப்பான IMHO-USA, இங்கிலாந்தின் இரத்தினம் அறக்கட்டளை (Ratnam Foundation UK) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், கல்வி அமைச்சின் பெருந்தோட்டப் பாடசாலைகள் பிரிவு இணைந்து இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இதன் முதற்கட்டமாக, ஊவா மாகாணத்தின் ஹாலிஎலை ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையத்தில், அண்மையில் மூன்று நாள் வதிவிடப் பயிற்சியாக நடைபெற்றது.
கல்வி அமைச்சின் பெருந்தோட்டப் பாடசாலைகள் பிரிவின் உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி செந்தில்வதனியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பயிற்சியில், 14 பெருந்தோட்ட பாடசாலைகளைச் சேர்ந்த 45 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.



கொழும்புப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களால் நடத்தப்பட்ட இப்பயிற்சியில், ரோபோட்டிக்ஸ் தொடர்பான செயன்முறைப் பயிற்சிகளும் நவீன தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவதற்கான வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.
இத்திட்டத்தின் கீழ், மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களைச் சேர்ந்த 28 பெருந்தோட்டப் பாடசாலைகளில் ரோபோட்டிக்ஸ் கழகங்களை அமைப்பதற்குத் தேவையான உபகரணங்கள்,வளங்களை அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் பெருந்தோட்டக் கல்விக்கான இணைப்பாளர் எம்.பி. சந்திரசேகரன், இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஆதரவளித்து வரும் வைத்திய கலாநிதி ராஜம் தேவேந்திரன் (IMHO-USA), கலாநிதி நித்தியானந்தன் (Ratnam Foundation UK),கல்வி அமைச்சின் பணிப்பாளர்கள் ஆகியோருக்கு நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
எஸ்.ஆர்.இரவீந்திரன்
