பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை 2026 நவம்பர் 15 இற்கு முன்னர் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் எனக் -கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாந்த் உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர்களுக்குத் தலா இரண்டு இலட்ச ரூபாய் வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த நிதியை எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆந் திகதிக்கு முன்னர் அபிவிருத்திப் பணிகளுக்கு செலவிட்டு, அறிக்கையைச் சமர்ப்பிக்கத் தவறினால் ஒதுக்கப்பட்ட நிதி, திரும்பிச் செல்வதற்கான வாய்ப்பு உண்டு என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும் என நேற்றைய (13) மாதாந்த அமர்வில் பேசும்போது தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில்:
2026 இல் எமது சபைக்குக் கிடைத்த வருமானத்தின் அடிப்படையில் ஒவ்வோர் உறுப்பினரின் அபிவிருத்தித் திட்டத்துக்கும் இரண்டு இலட்ச ரூபாய் வீதம் நிதி ஒதுக்கப்பட்டது. அதை முறையாகப் பயன்படுத்த வேண்டியது எமது பொறுப்பாகும். எனவே, அடுத்த மாதத்துக்குள் செலவிட்டு நிதி திரும்பிச் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.



மேலும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு எமது பிரதேச சபைக்கு உட்பட்ட, வாகனங்களை நிறுத்த வசதியான கொமர்ஷல் “வாவி” பகுதியில் தற்காலிகக் கடைகளை அமைத்து வாடகைக்கு விடுவதன் ஊடாக சபைக்கு மேலதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு கிட்டியுள்ளது.
அடுத்த ஆண்டில் வரி வீதமும் அதிகரிக்கவுள்ளது. எனவே, 2027 வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வோர் உறுப்பினருக்கும் 4 இலட்ச ரூபாய் வீதம் நிதியை ஒதுக்கித் தரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதேச அபிவிருத்திக்கு உறுப்பினர்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.


கொட்டகலை,லிந்துலை மாவட்ட வைத்தியசாலைகளில் நோயாளர்கள் தகுந்த முறையில் கவனிக்கப்படுவதில்லை எனவும், அங்குப் பணி புரிவோர் நோயாளர்களிடம் தரக் குறைவான வார்த்தைகளைப் பிரயோகிப்பதாகவும் உறுப்பினர்கள் புஷ்பா விஸ்வநாதன், எஸ். பத்மநாதன், எஸ். இராஜேந்திரன், திருமதி நேசமலர், ரசிக்கா ஆகியோர் முறைப்பாடு தெரிவித்துள்ளார்கள்.
இது தொடர்பாக பலரின் கவனத்துக்குக் கொண்டு வந்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே, மத்திய மாகாண ஆளுநரின் கவனத்துக்கு எழுத்து மூலம் கொண்டு வந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
எமது பிரதேச சபை உறுப்பினர்கள் மிகவும் ஒற்றுமையாக இருந்து தமது பணிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். அதேபோல், உறுப்பினர்களின் கௌரவத்தையும், கண்ணியத்தையும் காப்பற்றி சமுகத்துக்கு எதிராக செயற்படுவோர் மீது தமது அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகிறார்கள்.
அத்தோடு, எமது சபைக்கு 102 மில்லியான் ரூபாய் நிதியை ஒதுக்கிக் கொடுத்துள்ள அரசாங்கத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
