உயிரைக் கையில் பிடித்தபடி பாலத்தில் நடக்கும் கொத்மலை 50 ஏக்கர் மக்கள் உடனடியாக இந்தப் பாலத்தைப் புனரமைக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
தற்போது கன மழை பெய்து வருவதால், கொத்மலை ஐம்பது ஏக்கர் பாலம் இடிந்து விழும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.
இதனால், 120க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 இற்கும் மேற்பட்ட மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. ஆகவே அதிகாரிகள் உடனடியாகத் தலையிடுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஐம்பது ஏக்கர் பகுதியில் அமைந்துள்ள பிரதான பாலம் தற்போது மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதுடன், எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.



இந்தப் பாலத்தைப் பயன்படுத்தி ஐம்பது ஏக்கர் பகுதியில் வசிக்கும் 120க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 800க்கும் அதிகமானோர் தமது அன்றாட தேவைகளுக்காக பயணித்து வருகின்றனர்.
பாலத்தின் தற்போதைய ஆபத்தான நிலை காரணமாக இவர்களின் உயிருக்குக் கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கடந்த தித்வா புயலின் போது பாலம் ஓரளவு சேதமடைந்திருந்ததாகவும், இதுகுறித்து பிரதேச செயலகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல சந்தர்ப்பங்களில் அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை நிரந்தர தீர்வு வழங்கப்படவில்லை என்றும் பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக நுவரெலியா மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழையால் பாலத்தின் நிலை மேலும் மோசமடைந்துள்ளதாகவும், பாலத்தின் சில பகுதிகள் உடைந்து விழுந்துள்ளதால் போக்குவரத்துக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடும் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பாலத்தின் மீதும் நீர் பாயும் அபாயம் காணப்படுவதால், அந்த நேரங்களில் பாலத்தின் ஊடாக பாதுகாப்பாக பயணிக்க முடியாத நிலை ஏற்படுவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
பாலத்தின் ஊடாக வழக்கமான முறையில் பயணிக்க முடியாத நிலையில், பொதுமக்கள் தற்காலிகமாக மரப்பலகைகளைப் பயன்படுத்தி அவற்றின் மீது நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தற்காலிக பாதையில் பயணிக்கும்போது பாலம் அதிர்வதாகவும், அதன் இரும்புக் கம்பிகள் துருப்பிடித்த நிலையில் காணப்படுவதுடன், கான்கிரீட் பகுதிகள் உடைந்து விழும் நிலையில் இருப்பதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறிப்பாக கர்ப்பிணித் தாய்மார்கள், பாடசாலை மாணவர்கள், வயோதிபர்கள் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் இந்த நிலைமையால் கடுமையான ஆபத்தை எதிர்கொள்வதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அவசர நோய்நிலை ஏற்படும் சந்தர்ப்பங்களில் நோயாளியை விரைவாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்படுவதுடன், மரணம் ஏற்பட்டால் சடலத்தைக்கூட வெளியே கொண்டு செல்வதில் பாரிய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
அதேவேளை, அன்றாட தொழில்களுக்காக வெளியே செல்லும் பொதுமக்களும் பாடசாலை மாணவர்களும் பாலத்தின் மோசமான நிலை காரணமாக பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.
விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழும் முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அந்த இடத்துக்கு வந்து பாலத்தின் நிலைமையை தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்து, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
பாலத்தை முழுமையாக புனரமைக்க காலம் தேவைப்பட்டால், அதுவரை மக்களின் போக்குவரத்தை தொடர்ச்சியாக மேற்கொள்ள பாதுகாப்பான தற்காலிக பாதையையோ அல்லது மாற்று போக்குவரத்து வசதியையோ ஏற்படுத்துவது அதிகாரிகளின் பொறுப்பு எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல சந்தர்ப்பங்களில் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் இதுவரை நிரந்தர தீர்வு கிடைக்காதமை குறித்து அப்பகுதி மக்கள் கடும் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே, மேலும் ஒரு மழைக்காலம் அல்லது விபத்து ஏற்படும் வரை காத்திருக்காமல், ஐம்பது ஏக்கர் பகுதி மக்களின் உயிர்களையும் அன்றாட வாழ்க்கையையும் பாதுகாப்பதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் உடனடியாக தலையிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆர்.எப்.எம். சுஹெல் – நுவரெலியா நிருபர்
