காணாமல்போனதாகக் கூறப்பட்ட யாழ் பல்கலைக் கழக பெண் விரிவுரையாளர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வீட்டில் ஏற்பட்ட தகராற்றின்போது அவரது மருமகனின் தாக்குதலில் அந்தப் பெண் விரிவுரையாளர் உயிரிழந்திருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:
கணவன் – மனைவி இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், விரிவுரையாளரான தன் தாயையும் தங்கையையும், தங்கையின் கணவர் கடத்திச் சென்றதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் விரிவுரையாளரின் மகன் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இது குறித்து விசாரணை செய்வதற்காக பொலிஸார் பாண்டியன்தாழ்வில் உள்ள அவர்களது வீட்டிற்குச் சென்றனர். அங்கே வீட்டின் ஓடு கழற்றப்பட்டு கயிறு மூலம் வெளியேறியதற்கான ஆதாரமும், அறுக்கப்பட்ட தலைமுடி சான்றும் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டனர். அதன் அடிப்படையில் அவர்கள் பரந்தன் பகுதியில் உள்ள ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுத்திருந்தமை தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து திருகோணமலை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் வாகனத்துக்கு எரிபொருளை நிரப்பியமை QR குறியீடு மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் உள்ள சிசிடிவி கெமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நேற்றைய தினம் (20) திருகோணமலை பகுதியில் வைத்து 19 வயதுடைய பெண்ணையும் 21 வயதுடைய அவர் கணவனையும் கைது செய்தனர்.
அவர்களை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது, விரிவுரையாளரான பெண், மருமகனின் தாக்குதலின்போது உயிரிழந்த விடயம் தெரியவந்துள்ளது.
அதன் பின்னர், விரிவுரையாளரின் சடலத்தை எடுத்துச் சென்று யாழ்ப்பாணத்தில் உள்ள ஓர் இடத்தில் வீசிவிட்டு இருவரும் சென்றதாக விசாரணைகளில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கௌசல்யா
