ரமழான் நோன்பு முழு உலக சமூகத்திற்கும் மிக முக்கியமான மனிதாபிமான, சமூகச் செய்திகள் பலவற்றை ஏந்தி வருகின்றது. பக்தர்களின் உள்ளங்களில் சகவுணர்வை விதைப்பதே ரமழானின் உன்னதமான நோக்கமாகும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க விடுத்துள்ள ழமழான் நோன்புப் பெருநாள் வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார்.
மற்றவர்களின் பசி, அதன் வலியைத் தனது சொந்த அனுபவமாக உணர்ந்து, சகோதரத்துவ உணர்வுடன் மற்றவர்களை அரவணைக்கத் தயங்காத ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதாகும். இக்காலப் பகுதியில் ரமழானின் ஏனைய விழுமியங்களான அமைதி, சமத்துவம், சகவாழ்வு போன்ற உன்னத குணங்களால் முஸ்லிங்களின் நடத்தை பண்படுத்தப்படுகிறது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ரமழான் நோன்பு, உலக ஆசைகளில் இருந்து விடுபட்டு, அர்ப்பணிப்பு, எளிமையான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கின்றது.
ஒரு மாத காலம் அவர்கள் நோன்பு நோற்பதோடு அந்தக் காலப் பகுதியானது , அவர்களின் ஆன்மிக மேம்பாட்டிற்கான காலமாகும். எனவே, ரமழான் மாதம் என்பது உலகிற்கு வாழ்வியல் முன்மாதிரி மூலம் மனிதநேயத்தையும் சகோதரத்துவத்தையும் போதிக்கும் ஒரு காலமென நான் நம்புகிறேன்.
முழு உலகமும் கடினமான மற்றும் சவாலான ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கும் ஒரு தருணத்திலே இம்முறை ஈதுல் பித்ர் பெருநாளை நாம் கொண்டாட வேண்டியுள்ளது.
ரமழான் மாதத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நோன்பு மற்றும் பிரார்த்தனைகளின் ஆசீர்வாதத்தால், இந்த இக்கட்டான நிலைமை விரைவில் நீங்கி, அனைவரும் எதிர்பார்க்கின்ற, அனைவரினதும் உரிமைகளும் சுதந்திரமும் பாதுகாக்கப்படுகின்ற, அமைதி, சுபீட்சம் மற்றும் சகவாழ்வு நிறைந்த ஓர் உலகம் உருவாக வேண்டுமென நான் பிரார்த்திக்கிறேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.
