விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு விரைவில் பிணை கிடைக்க வேண்டியும், அவருக்காக ஆசீர்வாதம் வேண்டியும் விசேட ஆசீர்வாத பூஜைகள் நேற்று (24) ஹட்டன் மல்லியப்பு பகுதியில் அமைந்துள்ள சமன் தேவாலயத்திலும், நுவரெலியா சீதையம்மன் ஆலயத்திலும் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.
இந்த ஆசீர்வாத பூஜைகளில் நாமல் ராஜபக்ஷவின் கட்சி ஆதரவாளர்கள் ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
அம்பகமுவை பிரதேச சபை உறுப்பினர் இந்திக தொரகும்புர, ஹட்டன் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஷாஷி ரத்நாயக்க, நுவரெலியா பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர் கசுன் ரத்நாயக்க, வலப்பனை பிரதேச சபை உறுப்பினர் சுகத் ஹேரத்,ஸ்ரீலங்கா பொதுஜன விவசாயிகள் சபையின் நுவரெலியா மாவட்டத் தலைவர் நாலக ரத்நாயக்க ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.


ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் எயார்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுடன் தொடர்புடைய வழக்குகளில் நாமல் ராஜபக்ஷ தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
செப்டம்பர் 23ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர், அவரை செப்டம்பர் 30ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்படுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவருக்குப் பிணை பெற்றுக்கொள்வதற்கான நீதிமன்ற நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பின்னணியில் நாமல் ராஜபக்ஷவுக்காக விசேட ஆசீர்வாத பூஜைகள் நடத்தப்பட்டுள்ளன.
ஆர். எப். எம். சுஹெல் – நுவரெலியா
