கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (மொட்டுக் கட்சி), ராஜபக்ஷ அணியினரால் நடத்தப்படும் நிகழ்ச்சி வெறுமனே ஓர் அரசியல் செயல் திட்டம் என ஸ்ரீலங்கா தொழிலாளர் மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு பௌத்த சாசனம் அல்லது தர்ம அடிப்படையில் எவ்வித தொடர்பும் இல்லை எனவும், இது மற்றுமோர் அரசியல் நாடகம் மாத்திரமே எனவும் அக்கட்சியின் தலைவர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.
ஹட்டன் நகரில் இன்று (24) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்ஆவர் கருத்து தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சாமீர பெரேரா, கட்சியின் பொதுச் செயலாளரும் நோர்வூட் பிரதேச சபை உறுப்பினருமான நோயல் ஜனாஸ்தன்,தேசிய அமைப்பாளர் மிலான் பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்வாறான அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் அரசியல் ரீதியாக கவனம் செலுத்தி, அவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமீர பெரேரா வலியுறுத்தினார்.
நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டு செல்வதற்குப் பொறுப்பானவர்கள் முன்னெடுக்கும் இத்தகைய செயற்பாடுகளை மக்கள் ஏற்கனவே புறக்கணித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பௌத்தம் அனைத்து உயிரினங்கள் மீதும் அன்பு, கருணை,அகிம்சையைப் போதிக்கும் தத்துவம் எனத் தெரிவித்த அவர், புத்தர் சிலைகளுக்கு முன்னால் தோவில்கள் ஆடுதல், சாபமிடுதல்,வெறுப்பு நோக்கிலான செயற்பாடுகளில் ஈடுபடுதல் ஆகியவை பௌத்தத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு முரணானவை என்றும் தெரிவித்தார்.
ஆர்.எப்.எம். சுஹெல் –நுவரெலியா நிருபர்
