நுவரெலியாவில் அடைமழை ஆரம்பமாகியுள்ளதால் சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டில் அடைமழை ஆரம்பித்திருக்கிறது. அத்தோடு பனிமூட்டமும் நிலவுகிறது.
நுவரெலியா, ஹாவா-எலியா, கந்தப்பளை, நானுஓயா, டெஸ்போட், ரதல்லை, தலவாக்கலை உள்ளிட்ட பகுதிகளில் இன்று (25) காலை முதல் கடும் மழையுடன் பனிமூட்டமும் நிலவி வருகின்றது.
அடர்ந்த பனிமூட்டம் காரணமாக வீதிகளில் எதிரே வரும் வாகனங்களை அவதானிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், சாரதிகள் வாகனங்களின் வேகத்தைக் குறைத்து, முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்து பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நுவரெலியா – பதுளை, நுவரெலியா – ஹட்டன், நுவரெலியா – கண்டி பிரதான வீதிகளில் பயணிக்கும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர் மழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பல பகுதிகளில் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளதால், மண் திட்டுகளுக்கு அருகில் வசிப்பவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஜே.லக்ஷ்மிதாசன்
