களுகங்கையில் காணாமற்போனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று சனிக்கிழமை (05) பிற்பகல் வேளையில் களுகங்கையில் நீராடச் சென்று காணாமற்போன இளைஞர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (06) மாலை வேளையில் சடலமாக மீட்கப்பட்ட தாக இரத்தினபுரி எலபாத்தை பொலிஸார் தெரிவித்தனர்
இரத்தினபுரி தம்புளுவானை,மாரலியா பகுதியில் வசித்துவந்த பிரசாத் சம்பத் விஜேரத்ன (வயது 32) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
ஆற்றில் நீரில் மூழ்கி நீராடிக்கொண்டிருந்த இவர் திடிரெனக் காணாமல் போனதைத்தொடர்ந்து மாணிக்கக் கல் தோண்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களும் பிரதேச மக்களும் ஒன்றிணைந்து 05 ஆம் திகதி இரவு எட்டு மணி வரை தேடியபோதிலும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து இரத்தினபுரி,எலபாத்தை பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் படகுகள் மூலம் சென்று தேடிய போதிலும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னர் கடற்படையினரின் உதவியுடன் ஆற்றில் தேடிய போதிலும் சடலம் கிடைக்காத நிலையில், நீராடச் சென்ற இடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சடலம் திடிரென மிதந்து வந்தது. அது காணாமற்போனவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சடலம் மீட்கப்பட்டுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரத்தினபுரி நிருபர் எஸ். ஆர். இரவீந்திரன்
