பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் கேகாலை மாவட்ட பெருந்தோட்ட பாடசாலைகளின் அதிபர்களுடன் விசேட கலந்துரையாடல்!
கேகாலை மாவட்டத்திலுள்ள 67 பெருந்தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பாக அதிபர்களுடனான விசேட கலந்துரையாடல் இன்று (17 ) கேகாலை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
பெருந்தோட்ட,சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர் நிஷாந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இம்மாவட்ட பாடசாலைகளின் 3122 மாணவர்கள், 782 ஆசிரியர்கள், மாவட்டத்தின் தற்போதைய நிலைமை, எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலின் முக்கிய அம்சங்களாக பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர் இடைவிலகல் மற்றும் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக அதிபர்கள் தமது கருத்துகளை முன்வைத்தனர்.
பெருந்தோட்ட பாடசாலைகளை மாதிரி பாடசாலைகளாக மாற்றுதல், தகவல் தொழில்நுட்ப வசதிகளை விரிவுபடுதல், விளையாட்டு மைதானம் மற்றும் குடிநீர் வசதிகளை மேம்படுத்தல் உள்ளிட்ட எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் அதிபர்களின் பிரச்சினைகளாக நிதி ஒதுக்கீடுகளின் தாமதம், நிர்வாக பிரச்சினைகள், பெற்றோர்- ஆசிரியர் ஒத்துழைப்பு போன்று அதிபர்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கு உடனடி தீர்வு வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் சப்பிரகமுவை மாகாண பெருந்தோட்ட பாடசாலைகளுக்குப் பொறுப்பான பணிப்பாளர், கேகாலை மாவட்ட வலய கல்வி பணிப்பாளர்கள் மற்றும் அனைத்து பெருந்தோட்ட பாடசாலை அதிபர்களும் கலந்து கொண்டனர்.






