தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
அவர் டெல்லி சென்று பாஜக தேசியத் தலைவரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். இத்தகவல் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட்டார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை, கர்நாடகாவில் சிறப்பாகச் செயல்பட்ட நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு பணியில் இருந்து விலகி, அடுத்த ஆண்டே பாஜகவில் இணைந்தார். பின்னர் மாநிலத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், பல்வேறு அரசியல் மாற்றங்களை அடுத்து, அவருக்குப் பதிலாக நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அதிமுகவுடன் கூட்டணி அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால், அண்ணாமலை மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இதனால் அவர் கட்சியில் இருந்து விலகுவார் என்றும் முன்பே எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கட்சித் தலைமையின் உத்தரவுக்கேற்ப, பிரசாரம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்த அண்ணாமலை, 92 தொகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். கட்சித்தலைமை வாய்ப்பு வழங்கியபோதும் அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை.
