பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கராச்சி நகரிலிருந்து நேற்றுக்காலை பஞ்சாப் மாகாணத்திலுள்ள தேரா காசிகான் மாவட்டத்தை நோக்கிச் சென்ற பயணிகள் பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
லாகூரிலிருந்து சுமார் 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராஜன்பூர் பகுதியில் நெடுஞ்சாலையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அதிவேகமாக வந்த பேருந்து வீதிப்பிரிப்பானில் மோதியதில் இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
பேருந்தின் அதிக வேகமே விபத்துக்கு முதன்மை காரணம் எனக் கூறப்படும் நிலையில், காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்திற்கு பஞ்சாப் மாகாண முதலமைச்சர் மரியம் நவாஸ் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். அத்துடன், காயமடைந்தவர்களுக்குத் தேவையான சிறந்த மருத்துவச் சிகிச்சைகளை உடனடியாக வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
