சர்வதேச சிறுவர் தினத்யொட்டி நுவரெலியா மாவட்ட செயலகத்தில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அமர்வொன்று இன்று (01) நடைபெற்றது.
நுவரெலியா மாவட்ட சிறுவர் பாதுகாப்புப் பொறுப்பதிகாரி எம்.ஜி.ஹரேந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ்வமர்வில், மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளின் ஒழுக்காற்றுக் குழுக்களுக்குப் பொறுப்பான ஆசிரியர்கள், சிரேஷ்ட மாணவர் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
சிறுவர்கள் தற்போது எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வுகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.


மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டதுடன், அவற்றின் அடிப்படையில் பல்வேறு முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டன. இதனடிப்படையில், எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் செயற்றிட்டமொன்றை தயாரிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட நுவரெலியா மாவட்ட மேலதிக செயலாளர் திருமதி S. P. டிடுகும்புற கருத்து தெரிவிக்கையில், அமர்வில் முன்வைக்கப்பட்ட அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய வகையில் விரைவில் செயற்றிட்டமொன்று தயாரிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், நுவரெலியா மாவட்டம் போஷாக்கு மட்டத்தில் 25ஆவது இடத்தில் இருப்பது கவலைக்குரிய விடயம் என தெரிவித்த அவர், மாவட்டத்தின் போஷாக்கு நிலையை மேம்படுத்துவதற்காக அதிகாரிகளுடன் பல்வேறு மட்டங்களில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகளின் அடிப்படையில் 3,615 பிள்ளைகள் ஆதரவற்ற நிலையில் இருப்பதாகவும், 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 100 இளம் பெண்கள் தாய்மை நிலையை அடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சிறுவர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அனைவரினதும் பொறுப்பு என வலியுறுத்திய மாவட்ட மேலதிக செயலாளர், எதிர்வரும் காலங்களில் மாவட்ட அதிகாரிகள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பாடசாலைகளுடன் இணைந்து செயற்பட்டு, பிள்ளைகளின் பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட உளவியல் உத்தியோகத்தர் திருமதி N. S. குணசேகர, சமூக சேவை உத்தியோகத்தர்கள், வெளிநாட்டு விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறைசார் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் – கௌசல்யா
