கிம் ஜோங் முன்னிலையில் ஏவுகணை சோதனை

கிம் ஜோங் முன்னிலையில் ஏவுகணை சோதனை

வடகொரிய தலைவர் கிம் ஜோங் முன்னிலையில் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது.

தென்கொரியா பதற்றங்களைத் தூண்டுவதாக குற்றம்சாட்டிய பிறகு வடகொரியா ஆகஸ்ட் 23ஆம் தேதி இந்தச் சோதனைகளை மேற்கொண்டது.

“இரண்டு ‘மேம்படுத்தப்பட்ட’ ஏவுகணை ஆயுத அமைப்புகள் சிறந்த போர் திறன் கொண்டவை என்பதை சோதனை காட்டியுள்ளது,” என்று வடகொரிய செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ கூறியது.

“புதிய ஏவுகணைகளைப் பற்றிய மேல் விவரங்களை அது வெளியிடவில்லை. ஆனால் ஏவுகணைகளின் செயல்பாடு, எதிர்விளைவு ஆகியவை தனிச்சிறப்புமிக்க புதிய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது,” என்று கேசிஎன்ஏ குறிப்பிட்டது.

ஏவுகணைச் சோதனை எங்கு நடத்தப்பட்டது என்பதையும் அது வெளியிடவில்லை.

கேசிஎன்ஏ வெளியிட்ட படங்களில் தற்காப்பு ஏவுகணைகள் ஆகாயவெளியில் சீறிப் பாய்வதைக் காண முடிந்தது.

திரு கிம், ராணுவ அதிகாரிகள் விளக்குவதை உன்னிப்பாகக் கவனிக்கும் புகைப்படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அவரது அருகே உள்ள மேசையில் தொலைநோக்கிகளும் இருந்தன.

முக்கியக் கட்சி கூட்டத்திற்கு முன்பு, பாதுகாப்பு அறிவியல் துறை மேற்கொள்ள வேண்டிய முக்கியமான பணியை வட கொரியத் தலைவர் தனித்தனியாகத் தெரிவித்ததாக கேசிஎன்ஏ அறிக்கை மேலும் கூறியது.

இவ்வாரம் முன்னதாக ராணுவம் அதிகமுள்ள இரு நாடுகளுக்கு இடையிலான எல்லையில் பல வடகொரிய வீரர்களை நோக்கி எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தென்கொரியா ஆகஸ்ட் 23ஆம் தேதியன்று தெரிவித்தது.

முப்பதுக்கும் மேற்பட்ட வடகொரிய வீரர்கள் எல்லையைத் தாண்ட முயற்சி செய்தபோது இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இது, வடகொரியாவை கோபமூட்டியது. இந்யிலையில், வடகொரிய தலைவர் கிம் ஜோங் முன்னிலையில் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது.

Author

Related posts