மஸ்கெலியாவில் 20ஆண்டுகளாக மூடிக்கிடக்கும் ஆடைத்தொழிற்சாலை குறித்து சம்பந்தப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலம் சென்ற முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் கனவைச் சிதைத்த ஆடைத்தொழிற்சாலை மஸ்கெலியாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மூடிய நிலையில் உள்ளது.
கிராமத்திற்கு ஓர் ஆடைத் தொழிற்சாலை என்ற வகையில் காலம் சென்ற முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமானின் வேண்டுகோளுக்கு இணங்க மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நோட்டன் பிரதான வீதியில் கிலன்டிள்ட் தோட்ட எல். ஆர். சி யின் சுமார் ஐந்து ஏக்கர் காணியில் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டது.
ஆடைத் தொழிற்சாலை காலம் சென்ற முன்னாள் அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டது.
அக்கால கட்டத்தில் சுமார் 1200 இற்கு மேற்பட்ட பெண்கள், 100 இற்கு மேற்பட்ட ஆண்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
சுமார் ஏழு ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக இயங்கி வந்த தொழிற்சாலை சற்றுப் பின் வாங்க ஆரம்பித்தது.
அதன் உரிமையாளர் பணியாளர்களுக்கு வேதணம், ஊழியர் சேமலாப நிதி போன்ற கொடுப்பனவுகள் வழங்க முடியாது போனதால் அங்குப் பணியாற்றிய பலர் வேறு ஆடைத் தொழிற்சாலைகளை நாடினர்.
அதன் பின்னர் பலர் இந்த ஆடைத் தொழிற்சாலையை இயக்க முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.
சுமார் இருபது ஆண்டுகளுக்கு மேலாக மூடிய நிலையில் உள்ள இந்த ஆடைத் தொழிற்சாலை அதன் கூரைத் தகடுகள், உபகரணங்கள் ஆகியவற்றை உரிமையாளர் விற்பனை செய்து விட்டார்.
எஞ்சிய பொருள்கள் களவாடபட்ட நிலையில் தற்போது காட்டு மிருகங்கள் நடமாடும் இடமாகக் காட்சி அளிக்கிறது.
பிரேமதாசவின் கனவைச் சிதைத்த ஆடைத்தொழிற்சாலை அமைவிடத்தைத் தற்போதைய அரசு பொறுப்பேற்று பாரிய இட நெருக்கடியில் இயங்கி வரும் மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய கல்லூரிக்கு வழங்க வேண்டும்.
அல்லது மஸ்கெலியா பிரதேச சபைக்கும் நோர்வூட் பிரதேச சபைக்கும் செயலகம் அமைத்து இரண்டு அரச அலுவலகங்களும் ஒரே இடத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


..