சமாதானப் பேச்சைப் புறக்கணிக்க ரஷ்யா முயற்சி செய்வதாக உக்ரேனிய அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
ரஷ்யா அமைதி குறித்துப் பேசுவதற்கான சந்திப்பைத் தடுத்துநிறுத்த முயல்வதாகவும் போரை நீட்டிக்க விரும்புவதாகவும் உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடனான சந்திப்பைத் தவிர்க்க அந்நாடு ஆன அனைத்தையும் செய்வதாக அவர் சொன்னார்.
தலைவர்கள் இருவரையும் சந்திக்கவைக்க அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முயற்சி எடுத்தார்.
அவர்கள் இருவரையும் சந்திக்கவைப்பது என்பது எண்ணெய்யையும் தண்ணீரையும் இணைக்கவைப்பதைப் போன்றது என்றும் இரண்டும் ஒன்றுக்கொன்று ஒத்துப்போகமாட்டா என்றும் திரு டிரம்ப் கூறினார்.
ஆனால் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ், உச்சநிலை மாநாட்டிற்கான நிகழ்ச்சிநிரல் தயாரானவுடன் உக்ரேனியத் தலைவரைச் சந்திக்கத் திரு புட்டின் தயாராய் இருந்ததாகக் கூறுகிறார்.
நிகழ்ச்சி நிரல் இதுவரை தயாராகவில்லை என்று அவர் தெரிவித்தார். திரு. ஸெலென்ஸ்கி எல்லாவற்றுக்கும் எதிர்மறையான பதில்களையே தந்ததாகவும் திரு லாவ்ரோவ் சொன்னார்.
கடந்த ஒரு வாரத்தில் திரு டிரம்ப் முதலில் திரு புட்டினை அலாஸ்காவில் சந்தித்தார். பின்னர் அவர் திரு ஸெலென்ஸ்கியை ஐரோப்பியத் தலைவர்களுடன் வாஷிங்டனில் கண்டுபேசினார்.
தாம் நிறுத்த முயன்றதிலேயே உக்ரேனியப் போர்தான் ஆகக் கடினமானதாக உருமாறுகிறது என்று அமெரிக்க அதிபர் குறிப்பிட்டார்.
“தலைவர்களுக்கு இடையிலான சந்திப்புகளுக்கு உக்ரேன் அஞ்சாது,” என்று திரு ஸெலென்ஸ்கி கூறி, கியவுக்குச் சென்றுள்ள நேட்டோ தலைமைச் செயலாளர் மார்க் ருட்ட, இரு தரப்புக்கும் இடையிலான முட்டுக்கட்டையை அகற்றத் திரு டிரம்ப் முனைவதாகச் சொன்னார்.
உக்ரேன் மீது திரு புட்டின் மீண்டும் தாக்குதல் தொடுக்க முயல்வதைத் தடுக்க நேட்டோ கூட்டணி அமெரிக்காவுடனும் ஐரோப்பாவுடனும் இணைந்து பணியாற்றுவதாக அவர் கூறினார்.
உக்ரேனுக்கு வலுவான பாதுகாப்பு உத்தரவாங்களை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகத் திரு ருட்ட குறிப்பிட்டார்.
இந்நிலையில், சமாதானப் பேச்சைப் புறக்கணிக்க ரஷ்யா முயற்சி செய்வதாக செய்தியாளர்களிடம் பேசும்போது திரு. ஜெலன்ஸ்கி குறிப்பிட்டார்.