62ஆயிரம் அரச வேலைவாய்ப்பில் தமிழர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் சச்சுதானந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரச நிறுவனங்களில் சுமார் 62 ஆயிரம் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நியமன அனுமதியை அமைச்சரவையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா பெற்றிருக்கின்றார்.
இந்த நியமன அனுமதி நுவரெலியா மாவட்டத்திற்கும் தமிழர்கள் செறிந்து வாழுகின்ற பகுதிகளுக்கும் எந்த அளவு பக்க பலமாக அமையப் போகிறது என்பது எதிர்கால நடவடிக்கையைப் பொறுத்தே பார்க்க முடியும் என்று சச்சுதானந்தன் கூறினார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவவர் அமரர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களது காலப்பகுதியின் ஆசிரியர் நியமனங்கள், அரச ஊழியர்களுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமனங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
மத்திய மாகாண முன்னாள் மாகாண கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் காலப்பகுதியில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் கிடைத்தன.
இறுதியாக தனது பாராளுமன்ற காலப்பகுதியிலும் மலையகத்துக்கான 740 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்களையும் பெற்றுக் கொடுத்தார்.
இதைத் தவிர்த்து பார்க்கின்ற போது வேறு எந்தக் காலப்பகுதியிலும் அரசு நியமனங்கள் வேறு நிறுவனங்களின் நியமனங்கள் என்பவற்றை வேறு யாரும் பெற்றுக் கொடுத்ததாகத் தெரியவில்லை.
தற்போதைய அரசு எல்லா வழிகளிலும் பாகுபாடற்ற நல்ல நிர்வாகத்தை நடத்துவதற்கான செயற்பாடுகளை செய்வதாக கூறி வருகின்றது.
இந்த நிலையில் கிடைத்திருக்கின்ற இந்த மிகப்பெரிய வாய்ப்பில் சிறுபான்மை சமூகத்துக்குச் சரியான சந்தர்ப்பங்களை அவர்களது தகுதியின் அடிப்படையில் வழங்க வேண்டும்.
எண்ணிலடங்கா அரச ஊழியர்கள் ஓய்வு பெறுகின்ற இந்த நிலையில், கிடைத்திருக்கின்ற இந்த நியமன வாய்ப்பு இளைய சமுதாயத்தினர், பட்டதாரிகள் பயன்பெறும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும்.
தொழிலற்று போராடக் கூடிய நிலையை இல்லாது ஒழிக்கவும் மிகவும் பயனாக இருக்கும்.
எனவே மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இது சம்பந்தமாக வலியுறுத்தி அழுத்தம் கொடுக்குமாறு மிக வினயமாகக் கேட்டுக்கொள்கின்றேன்.
இந்தச் சந்தர்ப்பத்தை விட்டு விட்டால் இன்னும் ஒரு 55 வருட காலத்துக்கு 62 ஆயிரம் நியமன வாய்ப்பில் விகிதாசார அடிப்படையில் பார்த்தாலும் கூட சிறுபான்மை இனத்துக்கு சுமார் 23 ஆயிரம் நியமன வாய்ப்புகள் இல்லாது போய்விடும்.
ஆகவே, இதனைக் கவனத்தில் கொண்டு இன்றைய அரசுக்கு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என அங்கீகாரத்தைப் பெற்ற மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள் இதை வலியுறுத்த வேண்டும்.
இதற்கு முன்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கிடைத்த அத்தனை சந்தர்ப்பங்களிலும் அமரர் சௌமியமூர்த்தி தொண்டன் அன்று அரசோடு பேரம் பேசி இளைஞர்களுக்கு நியமனங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
அதன் பின்னால் அரசோடு இருந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் இணைந்து பணியாற்ற முடிந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் பல்வேறு நியமனங்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஊடாக அரசுக்கு அழுத்தம் கொடுத்து பெற்றுக் கொடுக்கப்பட்டது.
62ஆயிரம் வேலைவாய்ப்பில் தமிழர்கள் உள்வாங்கப்படுவார்களா? என்ற ஆதங்கத்திற்குச் சாதகமான பதில் கிடைக்க வேண்டும்.
இப்போது இருக்கின்ற தொழிலற்ற கணிசமான படித்த இளைஞர் யுவதிகளுக்கு அவர்களது எதிர்கால நலன் கருதி இந்த வாய்ப்பினை பெற்றுக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என சச்சிதானந்தன் கேட்டுக்கொண்டார்.