வீட்டு நாயை வேட்டையாடும் காட்டுச்சிறுத்தைகள் மக்களுக்குக் கடும் துன்பத்தைத் தருவதாக கினிகத்தேனைப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
சிறுத்தைகளின் நடமாட்டம் காரணமாக தேயிலை மலைகளில் கொழுந்து பறிக்கும் தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியுள்ளதாகவும், தங்களது வீடுகளில் செல்லப்பிராணிகளாக வைத்திருக்கும் நாய்களை சிறுத்தைகள் வேட்டையாடும் சம்பவம் தற்போது அதிகரித்துள்ளதாகவும் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கினிகத்தேனை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இரண்டு நாய்களில் ஒன்றை, சிறுத்தை இழுத்துச் செல்வது அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.
சிறுத்தைகளின் நடமாட்டம் தோட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகரித்துள்ளதன் காரணமாக அச்சம் ஏற்பட்டுள்ளதோடு, நாய்களை வேட்டையாடும் சம்பவம் அதிகரித்து காணப்படுகின்றது. எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
அதேவேளை, நாயொன்றை வேட்டையாடுவதற்கு வந்த சிறுத்தைக் குட்டியொன்று பொறியில் சிக்கியதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போட்றி தோட்டத்தில் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த பொறியிலேயே சிறுத்தைக் குட்டி இவ்வாறு சிக்கியுள்ளது.
இது தொடர்பில் நோர்வூட் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து நல்லத்தண்ணி வனவிலங்கு அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டது.
பின்னர், நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, பொறியில் சிக்கிய சிறுத்தை குட்டியை மீட்டு விடுவித்துள்ளனர்.