புற்றுநோயால் அவதிப்பட்ட சக ஊழியருக்காகத் தம் நண்பர்களுடன் சேர்ந்து சமைத்துக் கொடுப்பது முதல் அவரைக் கழிவறைக்கு அழைத்துச் செல்வது வரை பல்வேறு உதவிகளைச் செய்தார் வெளிநாட்டு ஊழியர் தங்கம் கார்த்திக்.
உயிரைக் காக்கும் திறன் அனைத்து ஊழியர்களுக்கும் இருக்க வேண்டும் என்பதால் ‘ஹெல்த்சர்வ்’ அறநிறுவனம் ஏற்பாடுசெய்த முதலுதவி/சிபிஆர் பயிலரங்கில் 249 ஊழியர்கள் பங்கேற்க அவர் ஊக்குவித்தார்.
இவ்வாறு பல்வேறு வழிகளில் சக ஊழியர்க்கு உதவிய திரு கார்த்திக் உட்பட அறுவருக்கு ‘ஹெல்த்சர்வ்’ அறநிறுவனத்தின் விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார் அதிபர் தர்மன் சண்முகரத்னம்.
காணாமற்போனவரைக் கண்டுபிடிக்க உதவிய திரு பாண்டியன் செல்வமுருகன்; வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சக ஊழியரின் குடும்பத்துக்கு உதவிய திரு ஹசான் காலித்; மோசடிகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய திரு பள்ளிகொண்டபெருமாள் ஜெயசேகர்; வெளிநாட்டு ஊழியர் பிரச்சினைகளுக்குக் குரல்கொடுக்கும் திரு ராசல் ஆகியோர் விருது பெற்ற ஏனையோர்.
திரு ஜெயசேகர், திரு கார்த்திக், திரு செல்வமுருகன், திரு ராசல் ஆகியோருக்கு ‘தலைசிறந்த நட்பாதரவுத் தலைவர்’ விருதும் திரு ஹசான் காலித்துக்கு ‘சேவை மனப்பான்மை’ விருதும் வழங்கப்பட்டன.
சிங்கப்பூர் ஆயுதப்படையின் முழுநேர வீரர் மாஸ்டர் சார்ஜண்ட் ஸ்டூவர்ட் ஆவ்வுக்கும் ‘ஹெல்த்சர்வ்’ அறநிறுவனத்தின் ‘சேவை மனப்பான்மை’ விருது வழங்கப்பட்டது.
இரு தங்குமிடங்களுக்கும் (பிபிடி லாட்ஜ் 1A, வெஸ்ட்லைட் உட்லண்ட்ஸ்) இரு நிறுவனங்களுக்கும் (ஹாய் லெக் எஞ்சினியரிங், கெல்லர் ஃபவுண்டேஷன்ஸ் (தென்கிழக்காசியா) சமூகப் பராமரிப்புப் பங்காளித்துவ விருதுகள் வழங்கப்பட்டன.
400க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்காக மரினா பே சேண்ட்சில் ‘ஹெல்த்சர்வ்’ அறநிறுவனம் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17) ஏற்பாடு செய்திருந்த ‘எஸ்ஜி60 அர்ப்பணிப்பு’ மதிய உணவு விருந்தில் இவ்விருதுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த மனிதவள, கலாசார, சமூக, இளையர்துறைத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ், “வெளிநாட்டு ஊழியர்களின் வாழ்க்கைத் தரம் ஆண்டுக்கு ஆண்டு மேம்பட்டுவருகிறது. கொவிட்-19 காலகட்டத்துடன் ஒப்பிடும்போது மேம்பட்டுள்ளது. தற்போது தங்குமிடங்களில் ஊழியர் நெரிசல் குறைந்துள்ளது,” என்றார்.
வந்திருந்த ஊழியர்கள் அனைவருக்கும் சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டுநிறைவை முன்னிட்டுச் சிறப்புப் பதக்கமும் வழங்கப்பட்டது