கற்களைப்போட்டுப் பாதையை மூடிய கல்நெஞ்சு கணக்கப்பிள்ளை!

கற்களைப்போட்டுப் பாதையை மூடிய கல்நெஞ்சு கணக்கப்பிள்ளை!

தோட்டத்தில் வாழும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பாதையில் பயணிக்கக் கூடாது என்று கற்களைப்போட்டுப் பாதையை மூடிய கல்நெஞ்சு கணக்கப்பிள்ளை! பற்றிய தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மறே தோட்ட ராஜமலை பிரிவில் உள்ள கணக்கப்பிள்ளையே இவ்வாறு அக்கிரமம் புரிந்துள்ளதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பாதை மூடப்பட்டதால், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், பயணிகள், முதியோர்கள், நோயாளிகள் பாரிய அசெகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.

கடந்த பல ஆண்டுகளாகப் பாவனையில் இருந்த குறுக்கு வீதியை தோட்ட நிர்வாகம் மூடியதால், சுமார் பத்து நிமிடத்தில் செல்லும் தூரத்தை இரண்டு கிலோ மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டி உள்ளது

எனவே, கடந்த காலங்களில் இருந்தது போல் குறுக்கு வீதியைத் திறந்து உதவ வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இராஜமலை பிரிவில் வெளிக்கள உத்தியோகத்தர் (கணக்கப்பிள்ளை) ஒருவரே இந்தக் குறுக்கு வீதிக்குக் குறுக்காக நிற்கிறார்!

பாதையை மூடிப் படிக்கட்டு அமைத்து படிகளுக்கு முன்னால் கற்களைக் குவியல் குவியலாகப் போட்டுள்ளார் இந்தக் கணக்குப்பிள்ளை.

இதன் காரணமாக தரம் ஒன்று முதல் 13 வரை நல்லதண்ணி, மஸ்கெலியா, கொட்டகலை பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்குத் தற்போது தோட்ட நிர்வாகிகள் வழங்கி உள்ள படிகளில் இறங்கி ஏறிச் செல்ல வேண்டியுள்ளது.

அந்தப் படிக் கட்டுகள் பாரிய அளவில் கரடு முரடான உள்ளது. அத்துடன் ஏறி இறங்கிச் செல்ல முடியாது உள்ளது எனப் பாடசாலை மாணவர்கள் தெரிவித்தனர்.

கடந்த பல ஆண்டுகளாக இருந்தது போல் குறுக்கு வீதியில் புதிதாக அமைத்துள்ள படிக் கட்டுகளை அகற்றும் படியும் அந்தக் குறுக்கு வீதியைத் தோட்ட நிர்வாகம் செப்பனிடத் தேவை இல்லை. அந்த வீதியைத் தாமாகவே முன்வந்து சிரமதானம் செய்து கொள்ள முடியும் எனவும் தோட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இரண்டு கிலோ மீட்டர் சுற்றி வரும் பட்சத்தில் இடை நடுவில் சிறு சிறு காடுகளும் உள்ளன. இந்தப் பகுதியில் பன்றி, சிறுத்தை நடமாட்டம் அதிகம்.

தரம் ஒன்று முதல் ஐந்து வரை கல்வி பயிலும் மாணவ மாணவிகள் எண்மர் (எட்டுப்பேர்) உள்ளனர். இவர்களின் பாதுகாப்பு பற்றித் தோட்ட நிர்வாகிகள் கவனம் செலுத்துவதுடன் ஏனைய மாணவர்கள் தங்கள் பயணத்தை ஆரம்பிக்க அதிகாலை 5.30 இற்குப் புறப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆர். பி. கே.பிளான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா மறே தோட்ட ராஜமலை பிரிவு சிவனடி பாத மலை வனத் தொடரில் சிவனடி பாத மலை உச்சிப் பகுதியில் அமைந்துள்ளது.

கற்களைப்போட்டுப் பாதையை மூடிய கல்நெஞ்சு கணக்கப்பிள்ளை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி இம் மக்களின் நலன் பேண வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்

Author

Related posts