மத்திய மாகாண வத்துகாமம் கல்வி வலயத்தில் மேலதிகக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய மௌலவி ஹாசிம் பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.
எதிர்வரும் 22.072025 அன்று தனது கல்விப் பணியிலிருந்து ஓய்வு பெறும் அவர், 1965 .07 .22 ஆம் திகதி அனுராதபுர மாவட்டம் கிரிப்பாவ என்னும் கிராமத்தில் பிறந்தார்.
இப்ராஹிம் அலிமா உம்மா ஆகியோருக்குப் புதல்வராக அவதரித்த இவர் ஆரம்பக் கல்வியைத் துருக்குராகம முஸ்லிம் வித்தியாலயத்தில் கற்றார்.
தொடர்ந்து இடைநிலைக் கல்வி மற்றும் மௌலவி கற்கை நெறியை மூதூர் நத்வத்துல் உலமா அரபுக் கல்லூரியில் கற்றுப் பட்டம் பெற்றார்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இவர் அந்தப் பல்கலைக் கழகத்திலேயே முதுமாணி பட்டத்தையும் பெற்றார்.
ஆரம்பக் கல்வி ஆசிரியராக 1990 ஜனவரி ஒன்றில் தான் கற்ற துருக்குராகம முஸ்லிம் வித்தியாலயத்திலேயே கடமையை ஏற்று தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர் நியமனம் பெற்றார்.
நாவலப்பிட்டி, சென்ட் மேரிஸ் கல்லூரி, குருந்துகஹஎல முஸ்லிம் வித்தியாலயம், கசாவத்தை முஸ்லிம் வித்தியாலயம், அக்குறணை முஸ்லிம் மகளிர் மகா வித்யாலயம் ஆகிய பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றினார்.
2007 இல் இலங்கை கல்வி நிர்வாக சேவை பரீட்சையில் சித்தியடைந்து மாத்தளை, வத்துகாமம், கட்டுகஸ்தொட்டை ஆகிய வலயக்கல்வி காரியாலயங்களில் உதவிக் கல்விப் பணிப்பாளர்,பிரதிக் கல்விப் பணிப்பாளர்,கல்விப் பணிப்பாளர் போன்ற பதவிகளை அலங்கரித்தார்.
வலயக் கல்விப் பணிப்பாளர் வெளிநாடு சென்ற சமயங்களில் வலயக் கல்விப் பணிப்பாளராகவும் கடமை ஆற்றியுள்ளார்.
அக்குறணையைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியரான எம் எம் பஷீரா உம்மா என்பவரை கரம் பிடித்து மூன்று பெண் குழந்தைகளுக்கும் ஓர் ஆண் குழந்தைக்கும் தந்தையானார்.
கஹட்டகஸ்திகிலிய ஜும்ஆமஸ்ஜித் நாவலப்பிட்டி, பலந்தொட்டை ஜும்மா மஸ்ஜித் ஆகியவற்றில் பல வருடங்கள் பிரதம இமாமாக கடமையாற்றினார்.
அப் பிரதேசங்களிலும் அக்குறணை பிரதேசத்திலும் பல நூறு மாணவர்களுக்கு அல்குர்ஆனை கற்றுக் கொடுக்கும் பணியிலும் ஈடுபட்டார்.
அக்குறணை ஜம்இய்யதுல் உலமா சபையின் உறுப்பினராக, உதவிச் செயலாளராக, இணைச் செயலாளராக, செயலாளராகக் கடமையாற்றியுள்ளார்.
அக்குறணை ஜாமியா ரஹ்மானியா அரபுக் கல்லூரியின் பணிப்பாளராகக் கடமையாற்றியதுடன் அதன் நிர்வாக சபை உறுப்பினராகவும் பல ஆண்டுகள் சேவையாற்றுகின்றார்.
பல அரபுக் கல்லூரிகளில் கல்விக்குழு அங்கத்தவராகவும் ஜாமியா ரஹ்மானியா மீசானியா ரசீதியா பரீரா பெண்கள் அரபுக் கல்லூரி, முஃமினாத் பெண்கள் அரபுக் கல்லூரி ஆகியவற்றினதும் அஸ்னா ஹிப்ழு மத்ரஸாவினதும் பொதுக் கல்வி விரிவுரையாளராகக் கடமையாற்றி உள்ளார்.
பட்டப்பின் படிப்பு கல்வி, டிப்ளோமா பட்டப்பின் படிப்பு கல்வி, முகாமைத்துவ டிப்ளோமா கற்கை நெறிகளில் விசேட சித்தி பெற்றுள்ளதுடன் இலங்கை தேசிய கல்வி நிறுவகத்தின் பகுதி நேர விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
சகல இனத்தவருக்கும் பாகுபாடின்றித் தமது கல்விச்சேவையை இவர் வழங்கியிருப்பதோடு சகலரின் நன மதிப்பையும் பெற்றுக்கொண்டு தன்னிகரில்லாப் பெருங்கல்விப் பணியை ஆற்றியுள்ளார்.
இத்தகைய பெருமை மிகு மௌலவி ஹாசிம் பணியிலிருந்து ஓய்வு பெறுவதையிட்டு அவருக்கு விசேட பாராட்டு விழாக்கள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன.
பன்விலை ம. நவநீதன்