நேரடித் தபால்சேவை இன்மையால் அவதியுறும் மக்கள் தமக்கு அந்தச் சேவையைப் பெற்றுத்தருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
கண்டி பன்விலை கலாபொக்க அரச பெருந்தோட்ட யாக்கத்தினால் நிருவகிக்கப்படும் தோட்டங்களுக்கு நேரடித் தபால் விநியோகம் இல்லை.
இதனால், தோட்டப்புற மக்களும் அங்கிருக்கும் கற்ற இளைஞர் யுவதிகளும் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
தோட்டக் காரியாலயங்களில் தமக்குரிய தபால்கள் தேங்கிக்கிடப்பதாலும் உரிய நேரத்திற்கு அவசர கடிதங்களும் ஆவணங்களும் கிடைக்கப் பெறாமையாலும் காலாகாலமாக பல்வேறு வாய்ப்புகள் இழக்கப்படுகின்றன.
இவ்வாறு முக்கியக் கடிதங்கள் தோட்டப்புற இளைஞர் யுவதிகளுக்குக் கிடைக்கப் பெறாமல் சொல்லொணா துன்பங்களுக்கு முகம்கொடுத்து வருவதாகப் பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மடுல்கலை தபால் நிலையத்தினரால் விநியோகிக்கப்படும் கடிதங்கள், ஆவணங்களை விநியோகிப்பதற்கு நேரடித் தபால் விநியோக ஏற்பாடுகள் அங்கில்லை.
இதன் காரணமாகத் தோட்ட நிர்வாகத்தால் கையேற்கப்படும் தபால்கள் பிரதான தோட்டக் காரியாலயத்தில் தேங்கிக் கிடக்கின்றன.
இவை உரியவாறு தோட்டப்புறங்களுக்கு விநியோகிக்கப்படுவதில்லையெனவும் பொது மக்களும் இளைஞர் யுவதிகளும் குற்றம் சுமத்துகின்றனர்.
கல்வியியற் கல்லூரிகள் பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி வாய்ப்புகளுக்கான நேர்முகப் பரீட்சைக்கான கடிதங்கள் நியமனக் கடிதங்கள் கிடைக்கப் பெறுவதில்லை.
கடிதங்கள் தாமதமாகக் கிடைக்கப் பெறுவதாலும் பல்வேறு வாய்ப்புகளை தோட்டப்புற இளைஞர் யுவதிகள் இழந்துள்ளனர்.
வங்கிகளால் விநியோகிக்கப்படும் தங்கை நகை அடகு தொடர்பான கடிதங்கள் கிடைக்கப்பெறாமையால் தமது தங்க நகைகளை மீட்க முடியாமல் பலர் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
கலாபொக்க, கலகிரிய, ரெலுகஸ், சோலங்கந்த, நெல்லிமலை போன்ற பல்வேறு தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் இவ்வாறு நேரடித் தபால் விநியோகம் இல்லாமல் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
வேகமாக வளர்ந்து வரும் நவீன தகவல் தொழில்நுட்பக் காலத்தில் தமக்குரிய கடிதஙகளே முறையாகக் கிடைக்கப்பெறாமை தமக்கு மிகப் பெரிய வேதனையை தருவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் தலையிட்டு உடனடியாக இப்பிரச்சினையைத் தீர்த்துவைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடுத்து வரும் மலையகத் தோட்டப்புற இளஞ் சமூகத்தவரின் விடிவிற்காக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தபால்சேவை இன்மையால் அவதியுறும் மக்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
பன்விலை ம. நவநீதன்