தமிழைக் கொச்சைப்படுத்த எதிர்க்கட்சிக்கு உரிமையில்லை!

தமிழைக் கொச்சைப்படுத்த எதிர்க்கட்சிக்கு உரிமையில்லை!

தமிழைக் கொச்சைப்படுத்த எதிர்க்கட்சிக்கு உரிமையில்லை! எங்களுக்கே உண்டு என்று சொல்வதைப்போல அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

எதிரணி உறுப்பினர் ஹேக்டர் அப்புபுஹாமி எழுப்பிய ஒரு கேள்விக்கு அமைச்சர் தமிழில் பதில் அளித்திருக்கிறார். அதனைக் கேட்டு உரைபெயர்ப்பாளர் எப்படி பெயர்த்தாரோ தெரியவில்லை, தனக்கு ஒன்றும் புரியவில்லை என்றும் பதிலை சபையில் சமர்ப்பியுங்கள் நான் பெற்றுக்கொள்கிறேன் என்றும் அந்த உறுப்பினர் குறிப்பிட்டார்.

இந்த நேரத்தில்தான் சற்றுக் குழப்பம். அமைச்சர் தமிழில் சொன்ன விளக்கம், உரை பெயர்த்தவருக்குப் புரியவில்லையா, அல்லது அமைச்சர் தனது தனித்துவத் தமிழில் சொல்ல வந்ததைச் சொல்ல முடியாமற்போனதா என்று தெரியவில்லை.

எப்படி இருந்தாலும் இங்கு ஒரு விடயத்தைச் சொல்லியாக வேண்டும். அமைச்சர் சொல்கிறார் எனது தாய்மொழி தமிழ். நான் தமிழில்தான் பதில் அளிப்பேன் என்று. அந்த உரிமையை யாரும் மறுக்க முடியாது. மொழி என்பது தொடர்பாடலுக்கானதே. நாம் சொல்லும் விடயத்தைத் தெரிந்த மொழியில் பிழையின்றி மற்றவர்கள் புரிந்துகொள்ளும்படி சொல்ல வேண்டும்.

அதனைவிடுத்து எனது மொழி இதுதான். நான் இப்படித்தான் பேசுவேன். கொச்சையாகப் பேசுவதுதான் எங்கள் தனித்துவம் என்று ஒரு தேசிய பரப்பில் நின்றுகொண்டு வாதம் புரிவது மடைமை.

குற்கனவே, யாழ்ப்பாணத்தில் ஜட்டி என்றும் பாராளுமன்றத்தில் புணரமைத்தல் என்றும் தமிழைப் பிழையாகப் பேசியது விமர்சனத்திற்கு உள்ளானது.

பாராளுமன்றம் ஒரு மாவட்டக் களம் அல்ல, வட்டார வழக்கைப் பேசுவதற்கு. அங்குள்ள அனைத்துப் பகுதி தமிழ் உறுப்பினர்களுக்கும் நன்கு தமிழ் தெரிந்த உரை பெயர்ப்பாளர்களுக்கும் புரியும்படியாக ஒரு தராதரத் தமிழில் உரையாற்ற வேண்டும். பேச வேண்டும். இதனை மறைந்த பேராசிரியர் சோ. சந்திரசேகரன் அடிக்கடி வலியுறுத்துவார்.

தராதரத் தமிழ் Standard Tamil கட்டாயமானது என்பார். அறிவிப்பாளர்களும் அப்படித்தான் பேச வேண்டும், ஊர்த் தமிழ் வரக்கூடாது என்பார்.

எனவே, கொச்சையாகப் பேசுவதுதான் மலையகத்தின் தனித்துவம் என்று சில கிறுக்கர்கள் சொல்லிக்கொண்டு இருக்கட்டும். பிரதேசம் கடந்து ஒரு தேசிய பரப்பில் பணியாற்றுபவர் தூய தமிழில் அல்லாவிடினும் சராசரியாக ஒரு தராதரத் தமிழில் பேசுவதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும். இதனை அமைச்சர் சந்திரசேகர் மறுக்கமாட்டார் என்று நம்புகிறோம்.

இப்படித்தான் தமிழைக் கொச்சையாகப் பேசினாலும் யாழ்ப்பாணத்தில் வாய்ப்பு பெற்றுக்கொண்ட எல்லாம் தெரிந்த ஓர் அரி(றி)விப்பாளர், சொல்கிறார், என்னுடைய தமிழ் இதுதான். நான் இப்படித்தான் உச்சரிப்பேன். கொச்சையாகத்தான் பேசுவேன். ஏற்க முடியாவிட்டால், அது உங்கள் பிரச்சினை. எனது பிரச்சினை அல்லவென்று.

சரியென்றால், அப்படிச் சொன்ன அன்றே அவரைத் துரத்தியிருக்க வேண்டும். சற்று காலந்தாழ்த்தித் துரத்தப்பட்டார். ஆனால், இன்னும் அவர் சொச்சையில்தான் மொச்சை விற்றுக்கொண்டிருக்கிறார்.

தமிழ் மொழி செம்மொழி. இனிமையான மொழி. உலகத்தில் ஒப்பற்ற மொழி என்று போற்றப்படும் மொழி. அந்த மொழியைச் சரிவரக் கற்றுக்கொள்ளாமல், எத்தனை மொழியைக் கற்றாலும் பயன் இல்லை. தாய் மொழியைச் சரியாகக் கையாளத் தெரியாதவனுக்கு எந்த இடத்திலும் மரியாதை மந்தமாகத்தான் இருக்கும்!

தமிழைச் சரியாகக் கையாளத் தெரியாததால்தான், தமிழ் எனும் பெரும் பரப்பிற்குள் உள்வாங்காமல், மலையக மக்கள் என்று ஓரங்கட்டி வைக்க்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மலையக மக்களின் மொழி தமிழ் இல்லை என்பதற்கு இவ்வாறான சம்பவங்களே உதாரணம்.

நான் தமிழன் என்று வாயில் பீற்றிக்கொண்டால் போதாது. அந்தத் தமிழைச் சரியாகக் கையாள வேண்டும். முடியாது என்பதற்காக ஒரு சமூகத்தை மலைக்குள் முடக்கும் முயற்சிக்கு முந்திக்கொண்டு தாமாகவே விலகிக்கொள்ளும் அற்ப செயலைக் கைவிட வேண்டும். அப்போதுதான் எதிர்காலச் சமூகமாவது மரியாதையுடன் தலைநிமிர்ந்து தமிழ் உலகுடன் கைகோக்கும்.

இந்தப் பணிக்கு அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் போன்றோர் உறுதுணை புரிய வேண்டும். கடந்த காலத்தில் பாராளுமன்றத்தில் இருந்தும் இன்னும் பேசத் தெரியாமல் உதறிக்கொண்டிருப்போருக்கு எந்த மரியாதையும் இல்லை என்பது வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கே புரியும்.

உணர்ச்சிவசப்பட்டுப் பேசுகிறேன் என்று நினைத்துக்கொண்டு உசார் மடையர்களைப்போல உரையாற்றாமல், திரு. ரவூப் ஹக்கீம் போன்றோர் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப்போல பேசினால்தான் சபை அடங்கும்! சொன்னதையும் கேட்கும். இதூதான் உண்மை.

உரையாற்றுவது ஒவ்வொருவரின் திறமை, அனுபவம், படிப்பு என்று வைத்துக்கொண்டாலும், குறைந்தபட்சம் அமைதியாக நல்ல தமிழிலாவது பேசி சபையின் கவனத்தை ஈர்க்கலாம் அல்லவா! இது சபைக்கு மட்டுமல்ல, இலங்கையில் நீங்கள் எந்த மேடையில் ஏறினாலும், தமிழ் உங்களுக்குத் தலை வணங்கும் வகையில் பார்த்துக்கொள்ளுங்கள்!

தமிழைக் கொச்சைப்படுத்த எதிர்க்கட்சிக்கு உரிமையில்லை! எமக்கே உண்டு என்று இனியும் சொல்லி திரு. ராமநாதன் போன்றோருக்குத் தீனி போடாதீர்கள்!

இந்தப் பதிவு மலைநாட்டு அரசியல்வாதிகளுக்கு மட்டுமானதல்ல, கற்றுக்கொண்டிருக்கும் இளம் சமுதாயத்தினருக்குமான பதிவு. கொச்சைத் தமிழ்தான் நம் தனித்துவம் என்று எந்த வீணன் சொன்னாலும் நம்பிவிடாதீர்கள். தமிழைத் தமிழாகப் பேசக் கற்றுக்கொள்ளுங்கள்!

மலைக்குருவி

பேஸ்புக்

Author

Related posts