மனித உரிமை ஆணையாளர் சபாநாயகர் சந்திப்பு

மனித உரிமை ஆணையாளர் சபாநாயகர் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் சபாநாயகர் சந்திப்பு நடைபெற்றுள்ளது. கட்சித் தலைவர்களுடன் அவர் சந்திப்பு நடத்தினார்.

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) நேற்று (24) பாராளுமன்றத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்தார். இதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்னவும் கலந்துகொண்டனர்.

இந்த சுமூகமான கலந்துரையாடலின் போது, சபாநாயகர் இலங்கை பாராளுமன்றத்திற்கு ஆணையாளரை வரவேற்றார். இலங்கையில் அண்மையில் நடைபெற்ற தேர்தல்கள் வன்முறை சம்பவங்கள் இல்லாமல், மக்களை பிளவுபடுத்தும் இன அரசியலை உறுதியாக நிராகரிப்பதை பிரதிபலிக்கக்கூடிய வகையில் சுதந்திரமாகவும், நியாயமாகவும், அமைதியாகவும் நடத்தப்பட்டதாக சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

உண்மையான நல்லிணக்கம் ஒவ்வொரு தனிநபரின் இதயத்திலிருந்தும் ஆரம்பிக்க வேண்டும் என்றும், மக்களால் வழங்கப்பட்ட ஆணை ஒற்றுமைக்கான அவர்களின் அபிலாஷையைப் பிரதிபலிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

சமூகங்களுக்கிடையில் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும், இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கும், ஜனநாயகம் மற்றும் வெளிப்படைத்தன்மையை நிலைநிறுத்துவதற்கும் தற்போதைய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக சபாநாயகர் மேலும் குறிப்பிட்டார்.

தற்போதைய பாராளுமன்றத்தின் முற்போக்கான உள்ளடக்கிய தன்மையை எடுத்துக்காட்டிய அவர், இலங்கை வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டமை மற்றும் பார்வை குறைபாடுடைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை என்பவற்றை சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளைப் பாராட்டிய மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், குறிப்பாக பல நாடுகள் எதிர் திசையில் நகர்ந்து கொண்டிருக்கும் உலகளாவிய சூழலில் சமூகங்களை ஒன்றிணைத்தல், நம்பிக்கையை கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்கத்தை அடைதல் என்பன உண்மையில் கடினமான பணியாகும் எனத் தெரிவித்தார்.

ஒவ்வொரு தனிநபரும் வேறுபாடுகள் இல்லாமல் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படுவதற்கான அடித்தளம் மனித உரிமைகள் என்று சுட்டிக்காட்டிய அவர், ஐக்கிய நாடுகள் சபை இந்த இலக்கை நோக்கி தொடர்ந்து செயல்படுவதை வலியுறுத்தினார்.

சபாநாயகருடனான சந்திப்பை அடுத்து, மனித உரிமைகள் ஆணையாளர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனும் பிரத்தியேக சந்திப்பை நடத்தினார். இதன்போது நாட்டின் சமூக – அரசியல் நிலைமை மற்றும் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

அத்துடன், இலங்கையின் மனித உரிமை நிலைமை, நல்லிணக்கச் செயன்முறை, தேவையான சட்ட மறுசீரமைப்புகள் தொடர்பிலும் அவர்கள் கருத்துக்களை முன்வைத்தனர். இலங்கையில் நிலையான நல்லிணக்கம் மற்றும் அமைதியை ஏற்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப ஆதரவையும் நிபுணத்துவத்தையும் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து வழங்கும் என்றும் கட்சித் தலைவர்கள் நம்பிக்கை வெளியிட்டனர்.

இந்தச் சந்திப்பில் கௌரவ சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, கௌரவ எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ் (Marc-André Franch), மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையாளர் அலுவலகத்தின் ஆசிய – பசுபிக் பிராந்தியத்துக்கான தலைவர் ரோரி முங்கோவன் (Rory Mungoven) உள்ளிட்ட ஐ.நா. பிரதிநிதிகள் குழுவினரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Author

Related posts