தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தமிழ்நாடு கடற்கரை பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று உருவாக வாய்ப்பு உள்ளது என்றும், இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வருகிற 26-ந் தேதி வரையில் (அதாவது இன்று முதல் 6 நாட்களுக்கு) கன முதல் மிக கனமழை வரை தொடரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
இதுதவிர வருகிற 23-ந்தேதி வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதனிடையே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முழுவதும் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்தது. மேலும், கனமழை தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கனமழை காரணமாக 5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.
