ஹபராதுவை, கொக்கலை பகுதியில் மாணவர்கள், ஆசிரியர்கள்,பெற்றோர்கள் பயணித்த பஸ் ரயில் கடவையில் ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 10 சிறுவர்கள் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (ஒக்டோபர் 25) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில்,, சுமார் 14,15 வயதுடைய காயமடைந்த சிறுவர்கள் கராப்பிட்டி, உனவட்டுனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொக்கலையில் அமைந்துள்ள மார்ட்டின் விக்கிரமசிங்க நினைவு அருங்காட்சியகத்திற்குச் சுற்றுலா சென்றுவிட்டு, மீண்டும் கொட்டாவை பகுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்த குழுவினரே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.
விபத்து இடம்பெற்ற போது, பஸ்ஸில் சுமார் 41 மாணவர்கள், 14 மேலதிக வகுப்பு ஆசிரியர்கள், பெற்றோர்கள் பயணித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக 40 வயதுடைய பஸ் சாரதியும் 21 வயதுடைய நடத்துநரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் ஹபராதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கௌசல்யா
