வடக்கில் மன்னார், யாழ்ப்பாணத்துக்கு விசேட அவதானம்
அரபிக்கடலில் காணப்படும் காற்றுச் சுழற்சி,வங்காள விரிகுடாவில் வலுப்பெற்று வரும் வானிலைத் தொகுதி காரணமாக, இலங்கையின் பல மாகாணங்களில் எதிர்வரும் சில நாள்களில் கனமழை முதல் அதிக கனமழை வரை பெய்யக்கூடும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
வடமாகாணம் – மன்னார், யாழ்ப்பாணத்துக்கு அதிக அவதானம்!
இன்று (25) அதிகாலை முதல் வடமாகாணத்தின் மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் மழை படிப்படியாக அதிகரிக்கக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் முதல் நாளை (26) நள்ளிரவு வரை பல பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மன்னார்,யாழ்ப்பாண மாவட்டங்களில் ஏனைய மாவட்டங்களைவிட அதிக மழை கிடைக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாகாணத்தின் சில தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, தாழ்வான பகுதிகளில் வசிப்போர் மழைநீர் தேங்கும் நிலைமைகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும்.
கிழக்கு,மேல் மாகாணங்களிலும் கனமழை!
திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இன்று முதல் நாளை மறுநாள் (27) காலை வரை கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக மட்டக்களப்பு,அம்பாறையில் சில மணிநேரங்கள் தொடர்ச்சியாக மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களிலும் மழை அதிகரிக்கக்கூடும். கொழும்பு, கம்பஹாவின் சில பகுதிகளில் இன்றும் நாளையும் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
வடமேல் மாகாணத்தின் புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு பகுதிகளில் எதிர்வரும் 28ஆம் திகதி வரை கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
⛈️ ஏனைய மாகாணங்களின் வானிலை நிலை!
வடமத்திய மாகாணம்: அநுராதபுர மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளில் கணிசமான மழையும், சில இடங்களில் மிகக் கனமழையும் பெய்யக்கூடும். பொலன்னறுவையில் சில இடங்களில் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய மாகாணம்: கண்டி, நுவரெலியா, மாத்தளை மாவட்டங்களின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்.
சபரகமுவை மாகாணம்: இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் கனமழையும், இரத்தினபுரியில் மிகக் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஊவா மாகாணம்: பதுளை மாவட்டத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். மொனராகலையில் இடையிடையே மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது.
தென் மாகாணம்: காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும். மாத்தறை, அம்பாந்தோட்டையின் சில பகுதிகளில் மிதமான மழை கிடைக்கலாம்.
⚠️ நிலச்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கை!
ஏற்கனவே பெய்துள்ள கனமழையுடன் மேலும் மழை பெய்யக்கூடும் என்பதால், மத்திய, சபரகமுவை,ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் ஏற்படலாம் என முன்னறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக நுவரெலியா, கண்டி, மாத்தளை, கேகாலை,பதுளை மாவட்டங்களில் வசிப்போர் அவதானமாக இருக்க வேண்டும். அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதுடன், நிலச்சரிவு எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டால் அவற்றை அலட்சியப்படுத்த வேண்டாம்.
⚡ இடியுடன் கூடிய மழை,பலத்த காற்று!
மழை பெய்யும் காலப்பகுதியில் செறிவான இடிமின்னல் நிகழ்வுகளும் இடம்பெறக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இடியுடன் கூடிய மழையின்போது திறந்தவெளிகள்,மரங்களுக்கு அருகில் இருப்பதைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
🎣 மீனவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!
அரபிக்கடல் காற்றுச் சுழற்சி,வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள வானிலைத் தொகுதி காரணமாக வடக்கு, கிழக்கு உள்ளிட்ட சில கடற்பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக இருக்கக்கூடும் என முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக வடக்கு,கிழக்குக் கடற்பகுதிகளுக்குச் செல்வதை மீனவர்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலுக்குச் செல்லும் முன் அதிகாரப்பூர்வ கடல்சார் வானிலை அறிவிப்புகளைச் சரிபார்ப்பது அவசியம்.
முக்கிய குறிப்பு: இவை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா வெளியிட்ட முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள்.
மழையின் அளவும் அதன் பரவலும் மாறக்கூடும். பொதுமக்கள் வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் புதுப்பிக்கப்பட்ட அறிவிப்புகளையும் பின்பற்ற வேண்டும்.
கௌசல்யா
