18 கிலோ பறித்தால் அரைப்பெயர்; 11 கிலோ நீங்கலாக மீதிக் கிலோவுக்குப் பணம்!
தோட்டத் தொழிலாளர்களின் வருமானத்தை உயர்த்துவதற்குப் புதிய உத்திகளை அறிமுகப்படுத்துவதாக மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபையின் (ஜனவசம) முகாமையாளர் தெரிவிக்கின்றார்.
அவர் அண்மையில் ஹங்குராங்கத்தை ஹோப் தோட்டத் தொழிலாளர்களை நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

மூன்று மணித்தியாலத்திற்குள் 23 கிலோவைப் பறிக்கும் வழியுண்டு என்றும் தொழிலாளர்களை மிக இலகுவாக 40 கிலோ வரை பறிக்கச் செய்து அவர்களின் வருமானத்தை உயர்த்துவதாக அவர் தெரிவித்தார்.
தேயிலைச் செடிகளுக்கு உரமிட்டுப் பராமரித்தால் நல்ல கொழுந்தை அறுவடை செய்ய முடியும் என்று குறிப்பிட்ட முகாமையாளர், தோட்டத்திற்குப் புதிய வாகனமொன்றைக் கொள்வனவு செய்யவுள்ளதாகவும் சொன்னார்.

தொழிலாளர்கள் அதிகம் கொழுந்து பறித்தால் நாட்சம்பளத்திற்கான கிலோ நீங்கலாக, மேலதிகக் கிலோவுக்குப் பணம் உழைக்க முடியும். அஃது ஒன்றும் கடினமானதன்று. எதற்கும் பயப்பட வேண்டாம். எல்லாம் இலகுவாக நடக்கும்! என்று அவர் தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டியுள்ளார்.
அதேநேரம், 18 கிலோ கொழுந்து பறித்து வந்தால்,11 கிலோவுக்கு அரைப்பேர் போடப்படும். மிகுதி கிலோவுக்குப் பணம் வேறாக வழங்கப்படும் என்ற நிர்வாகத்தின் சூட்சும திட்டத்தையும் முகாமையாளர் பகிரங்கமாக அறிவித்தார்.
எஸ். சுந்தரலிங்கம், கண்டி
