தேயிலைக் கொழுந்து பறித்த கைகளை இழிவுபடுத்துவது எளிது; ஆனால் அந்தக் கைகள் இந்த நாட்டிற்கு செய்த பங்களிப்பை மறைப்பது அவ்வளவு எளிதன்று” என்று இ.தொ.கா. பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் வன்மையாகக் கண்டித்துள்ளார்.
மலையகத் தமிழர்களை “கழிவறைகளை சுத்தம் செய்யவும், கொழுந்து பறிக்கவும் இங்கு வந்தவர்கள்” என இழிவுபடுத்தி, அவர்களை இனம்,சாதிய ரீதியில் அவமானப்படுத்தும் வகையில் சமூக ஊடகத்தில் நபரொருவர் வெளியிடப்பட்டுள்ள கருத்துகளுக்குக் கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
“சில நேரங்களில் மௌனம் என்பது சம்மதமாகிவிடும். இது அப்படிப்பட்ட ஒரு தருணம். தளிர் பறிக்கும் கரங்களை இழிவுபடுத்துவது சுலபம்; எனினும், அவை இந்த நாட்டுக்காக ஆற்றிய சேவையை மறுக்க முடியாது.
தமிழர்களைக் கடும் வார்த்தைகளைப் பயன்படுத்தி அவமானப்படுத்தியிருப்பது வெறுமனே ஒரு சமூக ஊடகப் பதிவு அன்று.
இது தலைமுறை தலைமுறையாக மலையகத் தமிழ் மக்கள் எதிர்கொண்ட இனவாதம்,சாதிய ஒடுக்குமுறையின் இன்னுமொரு வெளிப்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது.
எமது மூதாதையர்கள் இந்த நாட்டிற்கு வந்தது சொகுசான வாழ்க்கையைத் தேடி அன்று.கடினமான மலைப்பகுதிகளில், மிக மோசமான வாழ்க்கைச் சூழ்நிலைகளுக்கு மத்தியில், பரம்பரை பரம்பரையாக உழைத்தார்கள்.
அவர்களின் வியர்வையில்தான் இந்த நாட்டின் தேயிலைத் தொழில் வளர்ந்தது.
இன்று இலங்கை பெருமையாகப் பேசும் இலவசக் கல்வி,சுகாதாரம் உள்ளிட்ட நலன்புரி அரசின் கட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலகட்டங்களில், தேயிலை உள்ளிட்ட பெருந்தோட்ட ஏற்றுமதிகளிலிருந்து கிடைத்த வருமானமும் வரிகளும் நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பை வழங்கின.
அந்தத் தேயிலையின் ஒவ்வொரு கொழுந்திற்குப் பின்னாலும் எமது முன்னோர்களின் உழைப்பும் வியர்வையும் இருந்தது.
அன்று அவர்களின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் இன்று மருத்துவர்களாகவும், சட்டத்தரணிகளாகவும், ஆசிரியர்களாகவும், தொழில்முனைவோராகவும், அரச அதிகாரிகளாகவும், கலைஞர்களாகவும், விளையாட்டு வீரர்களாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் இந்த நாட்டின் பல்வேறு துறைகளிலும் சாதித்து வருகின்றனர்.
ஆனால் ஒன்றை மிகத் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன்.
கழிவறையை சுத்தம் செய்வதில் அவமானம் இல்லை.
தேயிலை கொழுந்து பறிப்பதில் அவமானம் இல்லை.
அந்த வேலையைச் செய்யும் மனிதர்களைத் தாழ்ந்தவர்களாக நினைப்பதில்தான் அவமானம் இருக்கிறது.
எமது இடம் எது என்று யாரும் எமக்குச் சொல்லித் தர வேண்டியதில்லை.
எமது இடம் இந்த நாட்டில்தான்.
இது எமது நாடும் கூட. இங்கு பிறக்கிறோம். இங்கு வாழ்கிறோம். இங்கு உழைக்கிறோம். இங்கு வாக்களிக்கிறோம். இங்கு எமது பிள்ளைகளை வளர்க்கிறோம். இந்த நாட்டின் வளர்ச்சிக்கு ஒவ்வொரு நாளும் பங்களிக்கிறோம்.
எமது முன்னோர்களின் உழைப்பை அவமானமாகக் காட்ட முடியாது.
எமது தொழிலாளர்களின் உழைப்பை இழிவுபடுத்த முடியாது.
எமது மக்களின் கண்ணியத்தை யாரும் தீர்மானிக்க முடியாது.
நல்லிணக்கம், சமத்துவம், தேசிய ஒற்றுமை என்று பேசிக்கொண்டே இப்படிப்பட்ட இனவாத மற்றும் சாதிய அடிப்படையிலான இழிவுபடுத்தல்களை சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது.
இந்த விடயத்தை நான் நாடாளுமன்றத்தில் எழுப்புவேன்.” என ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
