ஜெர்மனியில் ஹிட்லரின் மாளிகையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெர்மனியின் பவாரியா பகுதியில் உள்ள ஹிட்லரின் வரலாற்று மாளிகையான ‘ஈகிள் நெஸ்ட்’ கட்டடத்தில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு, விடிய விடிய போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
எனினும், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,800 மீட்டருக்கு மேல் அமைந்துள்ள இந்த மலைப் பகுதிக்குச் சென்று தீயை அணைப்பது மீட்புக் குழுவினருக்கு பெரும் சவாலாக இருந்தது.
தீ விபத்து ஏற்பட்டபோது கட்டடத்திற்குள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து சதியாக இருக்கலாம் என்கிற கோணத்தில் காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.
தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த சந்தேகத்திற்கிடமான நபர் தடுத்து நிறுத்தப்பட்டு தற்காலிகக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவருக்கும் தீ விபட்டுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.
1937 – 1938 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்ட இந்த இடம், இரண்டாம் உலகப் போரின் போது சேதமடையாமல் தப்பியது. பின்னர் இது 1952 முதல் ஒரு உணவகமாகவும், நாஜி வரலாற்றைக் காட்டும் அருங்காட்சியகமாகவும் செயல்பட்டு வருகிறது.
