களுகங்கையில் நீராடச் சென்ற இளைஞர் மாயமாகியுள்ளார்.
இரத்தினபுரி எலபாத்தை பொலிஸ் பகுதியிலுள்ள களுகங்கையில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் 05 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் இரண்டு மணியளவில் காணாமல் போயுள்ளார்.
இரத்தினபுரி தம்புளுவானை,மாரலியா பகுதியில் வசித்தவரும் அண்மையில் திருமணம் முடித்தவருமான பிரசாத் சம்பத் விஜேரத்தின (வயது 32) என்பவரே இவ்வாறு காணாமல் போனதாகப் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இவர் இரத்தினபுரி நகரில் உள்ள பிரபல தனியார் வங்கி ஒன்றில் கடமை புரிந்து வந்தவர்.சம்பவ தினம் நண்பர்கள் சிலர் களுகங்கையில் மாணிக்கக்கற்கள் தோண்டிக் கொண்டிருந்த போது இவர் அவ்விடத்தில் நீராடச் சென்று அங்குள்ள ஆழமான குழியில் சிக்குண்டு காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆற்றில் நீரில் மூழ்கி நீராடிக்கொண்டிருந்த இவர் திடிரெனக் காணாமல் போனதைத்தொடர்ந்து மாணிக்கக் கற்கள் தோண்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள்,பிரதேச மக்கள் ஒன்றிணைந்து 05 ஆம் திகதி இரவு எட்டு மணி வரை தேடியபோதிலும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து இரத்தினபுரி, எலபாத்தை பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸார் படகுகள் மூலம் சென்று தேடிய போதிலும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இரத்தினபுரி நிருபர் எஸ். ஆர். இரவீந்திரன்
