ஊவா பரணகமை அலகொல்லையில் 51 குடும்பங்களுக்குப் புதிய வீடுகள் நிர்மாணிக்க இன்று (29) அடிக்கல் நாட்டப்படுகிறது.
மண்சரிவு அதி உயர் அபாய வலயத்தில் வாழும் குடும்பங்களுக்கே புதிதாக வீடுகள் நிர்மாணிக்க செவ்வாய்க்கிழமை (29) காலை 9 மணிக்குப் பணிகள் ஆரம்பமாகின்றன.
கடந்த 13 வருடங்களாக பாதுகாப்பான வீடின்றி இருந்தவர்களுக்கு 32 இலட்சம் பெறுமதியான வீடு நிரமாணிக்கப்படுகிறது.
பெருந்தோட்ட,சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்தினா,பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர்.
“வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை யதார்த்தமாக்கும் வகையில், இந்திய அரசாங்கத்தின் உதவியுடனும் இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடனும் செயல்படுத்தப்படும் இந்திய வீட்டுத் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் 10,000 வீடுகள் வேலைத்திட்டத்தின் கீழ், இன்று அடிக்கல் நடப்படுகிறது.
மலையக சமூகத்திற்குப் பாதுகாப்பான, தரமான,கௌரவமான வீட்டு வசதிகளை வழங்கும் நோக்கில் இந்த வீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதில் ஒரு வீட்டு அலகுக்கு இந்திய அரசாங்கத்தால் ரூபா 28 இலட்சம் நிதி ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மேலதிக உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக இலங்கை அரசாங்கத்தால் ஒரு வீட்டுக்கு ரூபாய் 4 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
