நுவரெலியாவின் குடிநீர்,கழிவுநீர் பிரச்சினை தீர்க்க பாரிய திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாக நுவரெலியா மாநகர முதல்வர் உபாலி வணிகசேகர தெரிவித்தார்.
நீண்டகாலமாக நுவரெலியா மாநகர சபை எல்லைக்குட்பட்ட மக்கள் எதிர்நோக்கி வரும் சுத்தமான குடிநீர் பிரச்சினைக்கும் முறையான கழிவுநீர் மற்றும் மலக்கழிவு அகற்றும் கட்டமைப்பு இல்லாததால் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கும் நிரந்தரத் தீர்வு வழங்கும் நோக்கில், 25,100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பாரிய திட்டமொன்றை தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையின் ஊடாக நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
நுவரெலியா மாநகர சபையில் (05) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் முதல்வர் இதனைத் தெரிவித்தார்.
நுவரெலியா நகரின் குடிநீர் தேவையை முறையாகப் பூர்த்தி செய்வதுடன், நகரில் நிலவும் கழிவுநீர் மற்றும் மலக்கழிவு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்குவதும் இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என அவர் தெரிவித்தார்.
நுவரெலியா மாநகர சபையின் நீர் வழங்கல் பிரிவை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு ஒப்படைப்பது தொடர்பில் கடந்த மாதம் மாநகர சபையில் கடும் விவாதம் இடம்பெற்றிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருப்புப் பட்டி அணிந்து சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
மாநகர சபைக்கு வருமானத்தை ஈட்டித்தரும் முக்கிய வளமாக நீர் வழங்கல் பிரிவு காணப்படுவதாகக் குறிப்பிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அதனை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபைக்கு ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
அந்த சந்தர்ப்பத்தில் கருத்து தெரிவித்த மேயர் உபாலி வணிகசேகர, முன்மொழியப்பட்டுள்ள நீர் வழங்கல் திட்டம் தொடர்பில் மாநகர சபை உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய விளக்கங்களை வழங்கிய பின்னர், அடுத்த சபைக் கூட்டத்தில் இதுதொடர்பான யோசனையை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, நுவரெலியா நகரின் குடிநீர் மற்றும் கழிவுநீர் பிரச்சினை கிரகரி ஏரியின் சுற்றுச்சூழல் நிலைமையுடனும் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளது.
கிரகரி ஏரி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள், 2007 ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் திகதி வெளியிடப்பட்ட 1487/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் கீழ் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கிரகரி ஏரி முக்கியமான ஈரநிலச் சுற்றுச்சூழல் தொகுதியாக காணப்படுவதுடன், நகர்ப்புற மற்றும் விவசாயப் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் காரணமாக ஏரியின் நீர் மாசடைந்து வருவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த காலங்களில் கிரகரி ஏரியில் ஏற்பட்ட பாசி வளர்ச்சி உள்ளிட்ட நீர் மாசுபாடு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டிருந்தது. ஏரியின் நீரின் தரத்தையும் சுற்றுச்சூழல் சமநிலையையும் பாதுகாப்பதற்காக புனரமைப்பு மற்றும் முகாமைத்துவ பொறிமுறையொன்றை உருவாக்குவதற்கும் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் 2026 செப்டெம்பர் மாதத்தில் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இத்தகைய பின்னணியில், நுவரெலியா நகரின் குடிநீர் விநியோகத்தை முறையாக நிர்வகிப்பதுடன், மலக்கழிவு மற்றும் கழிவுநீர் முகாமைத்துவத்திற்கான நிரந்தரக் கட்டமைப்பொன்றை உருவாக்குவது, நகர மக்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் கிரகரி ஏரி உள்ளிட்ட சுற்றுச்சூழல் தொகுதிகளைப் பாதுகாப்பதற்கும் மிகவும் முக்கியமானதாக அமையும் என மேயர் மேலும் தெரிவித்தார்.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. நுவரெலியா நகரில் நீண்டகாலமாக நிலவி வரும் குடிநீர் மற்றும் மலக்கழிவு அகற்றும் பிரச்சினைகளுக்கு இத்திட்டத்தின் ஊடாக நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என மேயர் உபாலி வணிகசேகர நம்பிக்கை தெரிவித்தார்.
ஆர்.எப்.எம். சுஹெல் – நுவரெலியா நிருபர்
