நோர்டன்பிரிட்ஜ் பாடசாலைகள் இன்று காலை 11 மணிக்கு மூடல்
கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக மாணவர்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கை
நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அப்பகுதியில் உள்ள பாடசாலைகளை இன்று (24) காலை 11 மணிக்கு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழையுடனான காலநிலைக்கு மத்தியில், இன்றும் மழையுடனான காலநிலை தொடர்வதுடன், மத்திய மாகாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் அவ்வப்போது பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை முன்னறிவிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் மண்சரிவுகள் ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதால், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு பாடசாலை நடவடிக்கைகளை இடைநிறுத்தி, மாணவர்களை பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடும் மழையுடனான காலநிலை காரணமாக பிரதேசத்தின் வீதிகள் மற்றும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, பாடசாலைகளை மூடுவது தொடர்பில் அவசர முடிவுகளை மேற்கொள்ளுமாறு ஹட்டன் கல்வி அலுவலகம் முன்னதாகவே சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபர்களுக்கு அறிவுறுத்தியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நுவரெலியா மாவட்டம் உள்ளிட்ட மத்திய மலைநாட்டில் மழையுடனான காலநிலை தொடரக்கூடும் என்பதால், வீதிகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பிரதேச மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்
ஆர்.எப்.எம். சுஹெல் – நுவரெலியா நிருபர்.
