வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ள லிந்துலை மெராயா தமிழ் மகா வித்தியாலய வளாகத்தின் வெள்ளநீர் புகுந்ததால் இன்று (02) வெள்ளிக்கிழமை பாடசாலை மூடப்பட்டுள்ளது.
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் 1இன் கீழ் இயங்கும் இந்தப் பாடசாலைப் பகுதியில், நேற்று பிற்பகல் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகப் பாடசாலை அதிபர் கிருஷ்ணராஜா தெரிவித்தார்.
பாடசாலை வளாகம், வகுப்பறைகள், கணினி அறை உள்ளிட்ட பிரதான பகுதிகளில் வெள்ளநீர் புகுந்து, சேறும் சகதியுமாக காணப்படுகின்றது.
இதன் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு பாடசாலையைத் தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை வளாகத்தை முழுமையாகச் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக சுத்திகரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகள் நிறைவடைந்த பின்னர் பாடசாலை மீண்டும் வழமைபோல் இயங்கும் எனவும், இது தொடர்பில் நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளருடன் கலந்துரையாடியே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அதிபர் தெரிவித்தார்.
மலையகப் பகுதிகளில் அடிக்கடி நிலவும் சீரற்ற காலநிலையின்போது பாடசாலை வளாகத்திற்குள் மழைநீருடன் சேர்ந்து சகதியும் மண்ணும் வந்து சேர்வது தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் அதிபர் சுட்டிக்காட்டினார்.
எனவே, இதற்கு நிரந்தரத் தீர்வாக பாடசாலை வளாகப் பகுதியில் முறையான வடிகால்களை அமைத்துத் தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கௌசல்யா
