நுவரெலியா மாவட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும் அக்கரப்பத்தனை, ஊட்டுவள்ளி தோட்டத்தின் சிவசக்திபுரம் பகுதியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ சிவசக்தி வழிப்பிள்ளையார் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை (25.10.2026) பக்திப் பூர்வமாக நடைபெறுகிறது.

மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று (23.10.2026) ஆலயத்தில் விசேட சமய அனுஷ்டானங்கள் இடம்பெற்றன. இதன் ஒரு பகுதியாகப் பக்தர்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்து விநாயகப் பெருமானுக்குப் பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.
விசேட அபிஷேக ஆராதனைகளும் பக்தி பூர்வமாக இடம்பெற்றதுடன், பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகப் பெருமானின் அருளைப் பெற்றனர்.

எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு!
மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று சனிக்கிழமை (24.10.2026) ஆலயத்தில் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து, கும்பாபிஷேகத்திற்கான விசேட சமய அனுஷ்டானங்களும் கிரியைகளும் இடம்பெறும்.
ஞாயிற்றுக்கிழமை மஹா கும்பாபிஷேகப் பெருவிழா!
நாளை ஞாயிற்றுக்கிழமை (25.10.2026) யாகசாலையில் விசேட யாக பூஜைகள் இடம்பெற்று, வேத மந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்கள் இசைக்க, பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் பிரதான கும்பங்கள் எடுத்துச் செல்லப்படவுள்ளன.
இதனைத் தொடர்ந்து, ஆலய கோபுரக் கலசங்களுக்குப் புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.
இவ்விசேட ஆன்மிக நிகழ்வுகள் அனைத்தும் பிரதம குரு சிவஸ்ரீ திலகேஷ் சுவாமிகளின் தலைமையில் நடைபெறுகின்றன..
இறையருள் பொங்கும் இப்புனித மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு விநாயகப் பெருமானின் திருவருளையும் ஆசியையும் பெற்றுய்யுமாறு ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுக்கின்றனர்.
கௌசல்யா
