குழந்தைகள் தினத்தையொட்டி வலப்பனை சிறார்களின் சமாதான நடைபவனி இன்று (03) நடைபெற்றது.
உலகிற்கு சமாதானத்தின் செய்தியை எடுத்துச் செல்லும் நோக்கில் வலப்பனை பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நடைபவனி,வலப்பனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சிறுவர் கழகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 500 சிறுவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.
குருந்துஓயா பாலத்திற்கு அருகிலிருந்து ஆரம்பமான நடைபவனி வலப்பனை நகரின் ஊடாகச் சென்றதுடன், பின்னர் சிறுவர்களின் பங்கேற்புடன் சமாதானம் மற்றும் சிறுவர் உரிமைகள் தொடர்பான செய்தியை சமூகத்திற்கு எடுத்துச் செல்லும் வீதி நாடகமும் நகரில் அரங்கேற்றப்பட்டது.

சிறுவர் தலைமுறையினரிடையே சமாதானம், நல்லிணக்கம் மற்றும் ஒருவரையொருவர் மதிக்கும் பண்பை வளர்ப்பதுடன், சிறுவர்களின் குரல் ஊடாக சமூகத்திற்கு சமாதானத்தின் செய்தியை எடுத்துச் செல்வதே இந்நிகழ்ச்சியின் பிரதான நோக்கமாக அமைந்திருந்தது.
வலப்பனை பிரதேச செயலாளர் உசிதா மெணிக்சிங்க, வலப்பனை வலயக் கல்விப் பணிப்பாளர் ஜே.எல். கொல்லெல்பிட்டிய, வலப்பனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரசன்ன ஜயசிங்க மற்றும் வலப்பனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் விவகாரப் பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தேவிகா கருணாரத்ன உள்ளிட்ட அரச அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பெருமளவானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஆர்.எப்.எம். சுஹெல் – நுவரெலியா
