இரத்தினபுரி பெரண்டுவை தோட்டத்தில் அரச மரம் சரிந்து வீழ்ந்து 34பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி லெல்லுப்பிட்டி பெரண்டுவை தோட்டத்தில் பாரிய அரச மரமொன்று சரிந்து வீழ்ந்ததில் தோட்டத் தொழிலாளர்களின் வரிசைக் குடியிருப்பு முற்றாக சேதமடைந்தது.
இதில் 13 குடும்பத்தைச் சேர்ந்த 34 பேர் பாதிக்கப்பட்டு அங்குள்ள தற்காலிகக் கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.



இம்மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வேளையில் இம்மரம் சரிந்து வீழ்ந்தது.
இந்த அனர்த்தத்தில் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படாத நிலையில், இந்தப் 13 குடும்பங்களின் உடைமைகள் அனைத்தும் முற்றாக சேதமடைந்துள்ளன.
இதனால் பாதிக்கப்பட்ட இவர்களுக்கு மாற்றுத் துணிகள் கூட இல்லை எனத் தெரிவிக்கின்றனர்
தோட்ட நிருவாகமும் பிரதேச மக்களும் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆரம்பத்தில் உணவுப் பொதிகள் வழங்கினர்.
அதன் பின்னர் பெல் பதுளை பிரதேச செயலகமும் பிரதேச சபையினரும் நேரடியாகச் சென்று பார்வையிட்டு நேற்று முன்தினம் (26) முதல் தற்காலிக குடிலமைத்துத் தங்க வைத்துத் தேவையான உணவுகளையும் வசதிகளையும் செய்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களில் 4 பாடசாலை மாணவர்களும் அடங்குவர்.
இரத்தினபுரி எஸ்.ஆர்.இரவீந்திரன்
