பட்டப்பகலில் குண்டர்கள் அட்டகாசம்!
ஹட்டன், திக்கோயா ஒன்சி கல்லூரியில் நுழைந்த அடையாளம் தெரியாத சிலர், பாடசாலை மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அலுமாரிகளை உடைத்து, அவற்றில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் புத்தகங்கள், பிறப்புச் சான்றிதழ்கள், வினாத்தாள்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களுக்குத் தீ வைத்து அழித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (24) பிற்பகல் சுமார் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பாடசாலை மண்டபத்தில் இருந்த அலுமாரிகளின் கதவுகளை உடைத்த சந்தேகநபர்கள், அவற்றுக்குள் வைக்கப்பட்டிருந்த ஆவணங்களை வெளியே எடுத்து தீ வைத்துள்ளனர்.

பிற்பகல் வேளையில் பாடசாலை மண்டபத்திலிருந்து புகை,எழுவதைக் கவனித்த அதிபர், உடனடியாகச் செயற்பட்டுத் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதனால் தீ மேலும் பரவாமல் தடுக்க முடிந்துள்ளது. சம்பவம் நோர்வூட் பொலிஸார் விசாரணை நடத்துகின்றனர்.
இந்தச் சம்பவத்தில் மாணவர்களின் புத்தகங்கள்,பாடசாலைக்குச் சொந்தமான முக்கிய ஆவணங்கள் பெருமளவில் தீக்கிரையாகியுள்ளன.

சம்பவம் தொடர்பாகப் பாடசாலை அதிபர் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்காக நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஆர்.எப்.எம். சுஹெல் – நுவரெலியா நிருபர்
