எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடாமல், மத வேறுபாடின்றி தீவிரவாதத்திற்கு எதிராக குரல் எழுப்பிய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு சட்டரீதியான நடைமுறையின் கீழ் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என நுவரெலியா விஹாராதிபதி சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய வண. மாகதுரே ரதன தேரரும் வண. களுகஹகந்துரே விஜித தேரரும் தெரிவிக்கின்றனர்.
ஞானசார தேரர் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளினால் பௌத்த பிக்குவின் கௌரவத்திற்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட பாதிப்பைக் காட்டிலும் பாரதூரமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மகா சங்கத்தினர் மௌனம் கலைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
“ஞானசார தேரருக்கு ஏற்பட்டுள்ள நிலைமை ஒரு பிக்குவுக்கு எதிரான சட்ட நடவடிக்கை மாத்திரமல்ல. ஒரு பிக்குவின் கௌரவத்திற்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தை விடவும் அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மகா சங்கத்தினரும் நாட்டின் பொறுப்பு வாய்ந்த தரப்பினரும் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்” என அவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், ஞானசார தேரர் தொடர்பாக மகாநாயக்க தேரர்களும் சங்க சபைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிக்குகளும் மௌனம் காப்பது ஏதேனும் ஆளும் கட்சியின் அரசியல் அழுத்தம் காரணமாகவா என்ற சந்தேகம் நிலவுவதாகவும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
“அத்தகைய அரசியல் அழுத்தம் எதுவும் இல்லையென்றால், இந்த விடயத்தில் உடனடியாக கவனம் செலுத்தி ஞானசார தேரருக்காக நியாயமான தலையீட்டை மேற்கொள்ளுமாறு மகாநாயக்க தேரர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்” எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை அனுபவித்து வரும் ஞானசார தேரருக்கு முன்னர் வழங்கப்பட்டிருந்த ஜனாதிபதி மன்னிப்பு உயர் நீதிமன்றத்தினால் இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அரசியலமைப்பின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, ஞானசார தேரர் தொடர்பில் கருணை அடிப்படையிலான தீர்மானமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவது குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் வண. மாகதுரே ரதன தேரரும் வண. களுகஹகந்துரே விஜித தேரரும் மேலும் தெரிவித்தன.
ஆர்.எப்.எம். சுஹெல் – நுவரெலியா நிருபர்
