அனோஜன் விவகாரம் முழுக்க முழுக்க வெளிவிவகார அமைச்சு சம்பந்தப்பட்டது. அந்த சர்வதேச விவகாரத்தை அரசியலாக்காமல் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்! என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் இன்று (23) பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் வலியுறுத்தினார்.
வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கைப் பிரஜை ஒருவருக்கு எதிராக, குறித்த நாட்டின் கலாச்சாரம் மற்றும் மதத்தை அவமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விடயத்தை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தாமல், அரசாங்கம் பொறுப்புடன் கையாளுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது:
“வெளிநாட்டில் தொழில் புரியும் எமது நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராக அந்த நாட்டின் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், இது ஒரு தனிநபரின் பிரச்சினையாக மாத்திரம் பார்க்கப்படக்கூடாது. அரசாங்கமும் ஒரு நாடாக நாமும் ஒன்றிணைந்து, அவருக்கு தேவையான சட்டரீதியான உதவிகளை வழங்குவதற்கும், சாத்தியமான அனைத்து வழிகளிலும் அவருக்கு ஆதரவாக செயற்படுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த முயற்சிக்கு எமது முழுமையான ஆதரவை வழங்குகின்றோம். அதேவேளை, இது வெளிவிவகாரம் தொடர்பான ஒரு முக்கியமான சர்வதேச பிரச்சினை என்பதை எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே, இவ்விடயத்தை அரசியல் மயமாக்காமல், வெளிவிவகார அமைச்சுக்கும் அரசாங்கத்திற்கும் தேவையற்ற சிக்கல்கள் ஏற்படாத வகையில் பொறுப்புடன் கையாள வேண்டும். சர்வதேச விவகாரம் என்பதால், அரசாங்கத்திற்கு இதில் முக்கியமான பொறுப்பு உள்ளது. அதனை அரசாங்கம் கையாளுவதற்கு எதிர்க்கட்சியாகிய நாமும் தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
ஜனாதிபதி அவர்கள் மக்களுக்காக நல்ல விடயங்களை முன்னெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயற்படுகின்றார் எனக் கூறப்படும் நிலையில், அரசாங்கத்தைச் சேர்ந்த ஏனைய 159 பாராளுமன்ற உறுப்பினர்களும் அந்த நோக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் பொறுப்புடன் செயற்பட வேண்டும். ஜனாதிபதிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படக்கூடாது.
அதேநேரம், நான் ஒரு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக மக்களின் பல்வேறு பிரச்சினைகளை தொடர்பாக தொடர்ந்து இந்த சபையில் முன்வைத்து வருகின்றேன்.
அதாவது, டித்வா புயலினால் ஏற்பட்ட பாதிப்புகள், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு, பெருந்தோட்டங்களின் குத்தகைக் காலத்தை நீடிப்பது, வீட்டு உரிமை, காணி உரிமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றேன்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், அவர்களிடம் எதிர்பார்க்கப்படும் பணிச்சுமையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த சம்பள அதிகரிப்பு தொடர்பான அரச வர்த்தமானி வெளியிடப்பட வேண்டும் என நான் ஏற்கனவே அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளேன். எனினும், இதுவரை குறித்த அரச வர்த்தமானி வெளியிடப்படவில்லை
இவ்வாறான நிலையில், எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் ‘76 வருடங்களாக நீங்கள் என்ன செய்தீர்கள்?’ என கேள்வி எழுப்புகின்றனர்.
அந்தக் கேள்விக்கு வரலாற்று ரீதியான பதில்களும் உள்ளன. 1983 முதல் 1987 வரையான காலப்பகுதியில், இந்தக் கேள்வியை எழுப்பும் உறுப்பினரின் தந்தை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மாவட்டத் தலைவராகப் பணியாற்றியுள்ளார். அதேபோன்று, அவரது மூத்த சகோதரர் ஒருவர் தோட்டக் கமிட்டித் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.
மேலும், அவரது சகோதரி ஒருவருக்கு மறைந்த முன்னாள் தலைவர்களான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா மற்றும் முத்து சிவலிங்கம் ஐயா ஆகியோரின் முயற்சியினால் அரச நியமனத்தின் ஊடாக தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
அதேப்போன்று, கேள்வி கேட்கும் பாராளுமன்ற உறுப்பினர் பிறந்த ஊரில், அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா 2 மாடி பாடசாலைக் கட்டிடத்தை நிர்மானித்து வழங்கியுள்ளார். ஆறுமுகம் தொண்டமான் ஐயாவும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துள்ளார்.
மேலும், முன்னாள் ஊவா மாகாண அமைச்சராகப் பணியாற்றிய செந்தில் தொண்டமான் அவர்களாலும் குறித்த பாடசாலைக்காக பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பதையும் அவர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் உங்கள் கட்சியினால் அந்தக் காலப்பகுதியில் உறுவாக்கப்பட்ட , கலவரத்தினால் கைது செய்து சென் மார்க்ரட் இரானுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்ட மக்களை காப்பாற்றியவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் ஐயா. இது ஒரு உதாராணம் மாத்திரமே!, இது போன்ற பல்வேறு சம்பவங்கள் உள்ளன என்பதனையும் நினைவில் வைத்துக்கொள்ளவும்.
எனவே, கடந்த காலத்தைப் பற்றி இவ்வாறான கேள்விகள் எழுப்பப்படும் போது, அதற்கான வரலாற்று உண்மைகளையும் என்னால் முன்வைக்க முடியும். ஆனால், நான் யாரையும் குறை கூறுவதற்காக இதனை தெரிவிக்கவில்லை. இதுதான் யதார்த்தம். அந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு, ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதற்கு பதிலாக மக்களின் எதிர்காலத்திற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
