அக்கரபத்தனை வெவரலி தோட்டத்தின் போட்மோர், மோனிங்டன் மேற்பிரிவு, மோனிங்டன் கீழ்ப்பிரிவு,ஆடலி ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 600 தொழிலாளர்கள் இன்று (02) காலை முதல் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த காலங்களில் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் ரூ.1,700 சம்பளம் எவ்வித பிரச்சினைகளுமின்றி வழங்கப்பட்டு வந்ததாகவும், தற்போது வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கைகாசாக சம்பளம் வழங்கப்படுவதுடன், ஒரு கிலோகிராம் கொழுந்துக்கு ரூ.90 என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என தோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு சம்பளம் வழங்கப்படும் பட்சத்தில், அரசாங்கத்தினால் வழங்கப்படும் ரூ.200 கொடுப்பனவு தங்களுக்கு கிடைக்காமல் போகும் எனவும் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும், தோட்டப் பகுதிகள் முறையாக பராமரிக்கப்படாததன் காரணமாக பல பகுதிகள் காடாகியுள்ளதால், தொழிலாளர்களால் உரிய முறையில் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து சம்பளம் மற்றும் சலுகைகளை தோட்ட நிர்வாகம் முறையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வெவரலி மற்றும் போட்மோர் தோட்டங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தேயிலைத் தொழிற்சாலைக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து, தோட்ட நிர்வாகத்திற்கும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
எனினும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
செய்தியாளர்: கௌசல்யா
